

சட்டப்பேரவைத் தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வி.பன்னீர்செல்வம் எம்எல்ஏவுக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் கலசப்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசும் போது, "நம்முடன் கூட்டணியில்உள்ள கட்சிகள் எல்லாம் மக்களுக்கு சேவை செய்வ தற்கு ஒன்றிணைந்து உள்ளது. இது வலிமையான கூட்டணி. விவசாயிகளுக்கு இந்த அரசு பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. ஜெயலலிதா இருந்தபோது என்னென்ன திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்பட்டதோ, அந்ததிட்டங்கள் அனைத்தும் இன்றைக்கும் மக்களுக்கு கொண்டு செல்கிறோம். இந்த நாட்டை வழிநடத்திச் செல்லக் கூடிய இளைஞர்கள் மற்றும் எதிர்கால இந்தியாவையும் தமிழகத்தையும் ஆளக்கூடிய இளைஞர்களுக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
திமுக கார்ப்பரேட் கம்பெனி
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது நாட்டு மக்களுக்கு என்ன கொண்டு வருவோம் என்று பேசுவதில்லை. தேர்தல் முடிந்த பிறகு என்ன செய்வோம் என்று சொல்வதும் இல்லை. ஏனென்றால், அவர்கள் ஆட்சிக்கு வரமாட்டார்கள்.
ஆனால், நாம் மக்கள் ஆதரவுடன் ஆட்சிக்கு வருவோம். அதனால் என்னென்ன செய்தோம் என கூறுகிறோம். ஆனால், திமுகவை பொறுத்தவரை ஆட்சி அதிகாரத்தில் மாநிலம் என்றாலும் மத்தியில் என்றாலும் அவர்கள் குடும்பம் தான் இருக்கும். வேறு யாரையும் விட மாட்டார்கள். திமுக என்பது கார்ப்பரேட் கம்பெனி. அதற்கு சேர்மன் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, தயாநிதி ஆகியோர் இயக்குநர்கள். அவர்கள் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
நாட்டு மக்களுடன் பழகி அவர் களை புரிந்துகொண்டவர்கள் பதவிக்கு வரவேண்டும். மக்களின் தேவைக்காக குரல் கொடுக்கும் பன்னீர்செல்வத்துக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள்" என்றார்.