Published : 22 Mar 2021 09:33 PM
Last Updated : 22 Mar 2021 09:33 PM

"ஏலத்தில் முதல்வராக வந்தவர் எடப்பாடி பழனிசாமி" - காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து

"எடப்பாடி பழனிசாமி முறையாக முதல்வராகவில்லை ஏலத்தின் மூலம் முதல்வரானவர்" என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

சோளிங்கர் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஏ.எம்.முனிரத்தினத்தை ஆதரித்து சோளிங்கரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று (மார்ச் 22) இரவு பேசும்போது, ‘‘இந்தத் தேர்தலில் எடப்பாடியை அகற்றிவிட்டு ஸ்டாலினை அமரவைப்பது மட்டும் நோக்கமல்ல. அந்த இடத்தில் எடப்பாடி இருக்க வேண்டுமா? அல்லது ஸ்டாலின் இருக்க வேண்டுமா? என்று யோசிப்பதுதான் நோக்கம்.

எடப்பாடி பழனிசாமி முறையாக முதல்வராகவில்லை ஏலத்தின் மூலம் முதல்வரானவர். கிராமத்தில் குளம், ஏரி ஏலம் நடைபெறும். அந்த மாதிரியான ஏலத்தில் வந்தவர்.

ஸ்டாலின் 1970-ல் கிளைச் செயலாளராக அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து வளர்ந்து தற்போது இந்த இடத்துக்கு வந்துள்ளார்.

இந்தக் கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சியினரும் ஸ்டாலின் முதல்வராக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். அதற்குக் காரணம், அவர் நம்முடைய கொள்கையை நிறைவேற்றத் தகுதி படைத்தவர்.

எடப்பாடி பழனிசாமி ஊர்ந்து வந்தாரா? தவழ்ந்து வந்தாரா? என்பது எல்லாம் தெரியாது. ஆனால், அவர் முறையாக அந்தப் பதவியை பெறவில்லை.

எனவே, இது முக்கியமான தேர்தல். மாற்றத்தைக் கொண்டு வரும் தேர்தல். நமது தேர்தல் அறிக்கையில் தமிழகம் வளர்ச்சியைப் பற்றி சொல்கிறது.

காமராஜர் முதல்வராக இருந்தபோது தன்னுடைய முதல் 5 ஆண்டு காலத்தில் 12,500 ஆரம்ப பாடசாலையை ஆரம்பித்தார். அதனால்தான் கல்வியில் தமிழகம் இன்று சிறந்து விளங்குகிறது. அந்த அடித்தளத்தை ஸ்டாலின் பலமாக்குவார்.

சுதந்திர இந்தியாவில் இவ்வளவு பெரிய விலைவாசி உயர்வு வந்தது கிடையாது. பெட்ரோல் விலை ரூ.100 விற்கிறது. இதற்குக் காரணம் மோடி அரசால் சிறந்த பொருளாதாரக் கொள்கையைக் கொண்டு வர முடியாததுதான்.

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வால் அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் பெட்ரோலுக்காக தினமும் சராசரியாக 150 வரை செலவு செய்கின்றனர்.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது கச்சா எண்ணெய் பேரல் 108 டாலராக இருந்தபோது லிட்டர் பெட்ரோல் ரூ.70 ஆக விற்கப்பட்டது. இன்று உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் 54 டாலராக இருக்கிறது.

அப்படி என்றால் பெட்ரோல் விலை இன்று சரி பாதியாக குறைந்திருக்க வேண்டும். ஆனால் விலை மட்டும் குறையவில்லை. கலால் வரியை உயர்த்தி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினார்.

கலால் வரி மூலம் ரூ.21 லட்சம் கோடி வரியை வசூலித்துள்ளனர். மோடிக்கு பொருளாதாரம் தெரியாது. அடித்துச் சொல்லலாம் அவருக்கும் அவரது அமைச்சர்களுக்கும் தெரியாது.

தெரிந்திருந்தால் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்திருப்பார்களா? துக்ளக் ஆட்சியைத்தான் மோடி நடத்துகிறார். நாட்டின் பொருளாதாரத்தை தலைகீழாக மாற்றி விட்டார் மோடி.

ஜிஎஸ்டி வரி காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. நாங்கள் சொன்ன ஜிஎஸ்டி வரி என்பது ஒரே வரி, குறைந்தபட்ச வரி என்று விரும்பினோம். ஆனால், மோடி கொண்டுவந்தது அதிகப்படியான வரியுடன், நிறைய வரிகளை விதித்தார்.

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு அரசு வேலை கொடுத்தார்கள் என்று எடப்பாடியால் சொல்ல முடியுமா? 80 லட்சம் மாணவர்கள், இளைஞர்கள் படித்து வேலைக்காக காத்திருக்கிறார்கள். தமிழத்தை தமிழகம் ஆள வேண்டுமா? அல்லது டெல்லி ஆள வேண்டுமா? என்பதுதான் பிரச்சினை. இதில் தமிழர்களின் சுய மரியாதை மதிப்பும் அடங்கி இருக்கிறது’’ என்று பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x