Published : 22 Mar 2021 07:17 PM
Last Updated : 22 Mar 2021 07:17 PM

அதிகரிக்கும் கரோனா; பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை: மதுரை மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

"மதுரையில் மீண்டும் கரோனா தொற்று அதிகரிப்பதால் பாதுகாப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மாநகராட்சி ஆணையாளர் விசாகன் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் தற்போது கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டிருப்பதால் பொதுமக்கள் தங்களை அந்த தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அவசியம் அணிய வேண்டும். அடிக்கடி கைகளை சானிடைசர் அல்லது சோப்பு கொண்டு கைகழுவ வேண்டும்.

சமூக இடைவெளியினைக் கடைப்பிடிக்க வேண்டும். கரோனா நோய்த் தொற்று உள்ளவர்கள் கபசுர குடிநீர் அவசியம் அருந்த வேண்டும். மதுரை மாநகராட்சியின் 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், ‘கோவிட் 19’ தடுப்பூசி காலை 9 மணி முதல் 4 மணி வரை இலவசமாகப் போடப்பட்டு வருகிறது.

எனவே 45 வயதிற்கு மேல் இணை நோய் உள்ளவர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் அவசியம் கோவிட் 19 தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். முன்களப்பணியாளர்கள் மற்றும் தேர்தல் பணியில் உள்ள பணியாளர்கள் அனைவரும் அவசியம் கோவிட் 19 தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

வணிக நிறுவனங்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். பின்பற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

மதுரை மாநகராட்சி மூலம் கடந்த ஒராண்டாக தொடர்ந்து காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில் காய்ச்சல் அறிகுறி கண்டவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து அதற்கான சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும்.

காய்ச்சல் தொடர்பான சந்தேகங்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் மாநகராட்சி அழைப்பு மையம் எண். 8428425000என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x