பள்ளி முதல் கல்லூரி வரை தமிழில் படித்தவர்களுக்கே தமிழ் வழிக்கல்வி சலுகை: உயர் நீதிமன்றம் உத்தரவு

பள்ளி முதல் கல்லூரி வரை தமிழில் படித்தவர்களுக்கே தமிழ் வழிக்கல்வி சலுகை: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

பள்ளி முதல் கல்லூரி வரை தமிழில் படித்தவர்களுக்கே தமிழ் வழிக்கல்வி பயின்றோர்களுக்கான இடஒதுக்கீட்டு சலுகை வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராவ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் 2019-ல் டிஎன்பிஎஸ்சி துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 181 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் உரிய மதிப்பெண் பெற்றும் நான் தேர்வாகவில்லை.

தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டிலும் நான் தேர்வாகவில்லை. இது குறித்து விசாரித்த போது, தொலை நிலைக்கல்வியில் படித்தவர்களுக்கும் தமிழ் வழிக்கல்வி சலுகை வழங்கியது தெரியவந்தது.

தொலை நிலைக்கல்வி பயின்றவர்களுக்கு தமிழ் வழிக்கல்வி சலுகை வழங்குவது சரியல்ல. தொலை நிலைக் கல்வியில் படிப்பவர்கள் சில படிப்புகளை ஆங்கில வழியிலும், சில படிப்புகளை தமிழ் வழியிலும் படிக்கின்றனர். இவர்களை தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களாக கருத முடியாது.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டு சலுகையை பெரும்பாலானும் தொலை நிலைக்கல்வியில் பயின்றவர்களே பெறுகின்றனர்.

எனவே, குரூப் 1 தேர்வில் வெற்றிப்பெற்றவர்களுக்கு தமிழ் வழிக்கல்வி சலுகை அடிப்படையில் பணி நியமன உத்தரவு வழங்க தடை விதிக்க வேண்டும், குரூப் 1 தேர்வு பட்டியலுக்கு தடை விதித்து, கல்லூரிகளுக்கு நேரில் சென்று தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களை அடிப்படையாக கொண்ட புதிய பட்டியல் தயாரித்து குரூப் 1 நியமனங்களை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்து.

இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு பிறப்பித்த உத்தரவு:

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரை அல்லது நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியை தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டு சலுகை வழங்க வேண்டும்.

தமிழ் வழியில் பயின்றோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டு சலுகையில் விண்ணப்பிப்பவர்களிடம் பெறப்பட்ட சான்றிதழ்கள் முறையாக பெறப்பட்டதாக என்பதை சரிபார்க்க வேண்டும்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் பயின்றதாக போலி சான்றிதழ் வழங்கப்பட்டது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in