Published : 22 Mar 2021 06:17 PM
Last Updated : 22 Mar 2021 06:17 PM

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 தொகுதிகளில் 113 பேர் போட்டி: சுயேச்சைகளுக்கு சின்னங்களும் ஒதுக்கீடு

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 113 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சுயேச்சைகளுக்கு சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம் 8 தாலுகாக்கள், 8 ஒன்றியங்கள், 8 நகராட்சிகள், 12 பேரூராட்சிகள், 359 ஊராட்சிகள் மற்றும் 3 மக்களவைத் தொகுதிகள், 7 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது. மாவட்டத்தில், தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர், மதுராந்தகம் (தனி), செய்யூர் (தனி), செங்கல்பட்டு, திருப்போரூர் என மொத்தம் 7 தொகுதிகள் உள்ளன. வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் 27 லட்சத்து 16 ஆயிரத்து 385 வாக்காளர்கள், 7 சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளனர்.

தேர்தல் ஆணைய அறிவுரையின்படி, வாக்குச் சாவடிகளைப் பிரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு, நகரம் மற்றும் கிராமப்புறங்களில் 1,050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள பாகங்களைப் பிரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஏற்கெனவே 7 தொகுதிகளில் 2,752 வாக்குச் சாவடிகள் இருந்த நிலையில், தற்போது கூடுதலாக 1,081 வாக்குச் சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சோழிங்கநல்லூர் தொகுதியில் 991 வாக்குச்சாவடி மையங்கள், பல்லாவரம் 608, தாம்பரம் 576, செங்கல்பட்டு 597, திருப்போரூர் 417, செய்யூர் (தனி) 325, மதுராந்தகம் (தனி) 319 என மொத்தம் 3,833 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், அதிமுக, பாமக, தேமுதிக, அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் சுயேச்சைகள் என 196 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இதில் 77 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இறுதியாக 119 பேர் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இன்று (22-ம் தேதி) திருப்போரூர், செங்கல்பட்டு தொகுதிகளில் தலா ஒருவரும், செய்யூர், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் தலா இருவரும் என மொத்தம் 6 பேர் வாபஸ் பெற்றுள்ளனர். தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் ஆகிய தொகுதிகளில் யாரும் வாபஸ் பெறவில்லை. இறுதியாக தாம்பரத்தில் - 22, பல்லாவரம் - 22, சோழிங்கநல்லூர் - 26, செங்கல்பட்டு -13, திருப்போரூர் - 11, செய்யூர் ( தனி) -9, மதுராந்தகம் (தனி) -10 என மொத்தம் 113 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர்.

மேலும், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இனிமேல் தான் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கும்.

வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்துள்ள கட்சித் தலைவர்கள் வரும் ஏப்ரல் 4-ம் தேதி மாலை வரை பிரச்சாரம் செய்யலாம். அதன்பிறகு ஏப்ரல் 6-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x