

கரோனா வைரஸ் பரவல் குறித்தும், தடுப்பூசி குறித்தும் நம்பகத்தன்மையான தகவல்களை மக்களுக்கு வழங்கத் தமிழகப் பொது சுகாதார மற்றும் தடுப்பு மருந்துப் பிரிவுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
மக்களுக்கு கரோனா தடுப்பூசி குறித்தும், எங்கு தடுப்பூசி போடலாம் என்பது குறித்தும் துல்லியமான, நம்பகத்தன்மையான, உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை நவீன முறையில் மக்களுக்கு கோவிட் தடுப்பூசி பயனாளிகள் உதவி முறை (சிபிபிஏஎஸ்) மூலம் வழங்கப்படுகிறது.
கோவிட் தடுப்பூசி பயனாளிகள் உதவி முறை (சிபிபிஏஎஸ்) மூலம் கரோனா தடுப்பூசி குறித்து மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ளவும், அறியவும் முடியும்.
சமூக ஊடகங்களில் மக்களை நோக்கி, கரோனா தொடர்பாக வரும் போலிச் செய்திகள், வதந்திகள், உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் ஆகியவை வருகின்றன. அவற்றைத் தடுப்பதற்காக முதல் முறையாக மாநில அரசுடன் இணைந்து யுனிசெஃப் செயல்படுகிறது.
2019-ம் ஆண்டு கரோனா வைரஸ் தொற்று உருவானதிலிருந்து, தவறான செய்திகள்தான் , கோவிட்-19 பெருந்தொற்றைச் சமாளிப்பதில் மிகப்பெரிய இடையூறாக இருந்துவருகிறது. மக்களைச் சென்றடையும் மிகப்பெரிய ஊடகங்கள் மூலம் கரோனா குறித்துப் பிரச்சாரங்கள் செய்யப்பட்ட போதிலும்கூட, போலிச் செய்திகள், உறுதி செய்யப்படாமல் தொடர்ந்து வருவது பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
இந்தக் குழப்பத்தைக் குறைக்கவும், அதற்கு பதில் அளிக்கும் விதத்தில்தான், கோவிட் தடுப்பூசி பயனாளிகள் உதவி முறை செயல்படுகிறது. கரோனா தடுப்பூசி தொடர்பாக எழுத்துபூர்வமாகவும், காட்சிகள் மூலம் மக்களுக்கு உண்மைத் தகவல்களை வழங்குவதுதான் கோவிட் தடுப்பூசி பயனாளிகள் உதவி முறையின் நோக்கமாகும்.
கரோனா தடுப்பூசி செலுத்துவதற்குச் சரியான வயது, தமிழகத்தில் எங்கெல்லாம் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்படுகிறது, எவ்வாறு தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்வது, தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசியின் விலை, தடுப்பூசி செலுத்திக்கொண்டால் வரும் பக்கவிளைவுகள் ஆகிய தகவல்களை வழங்குகிறது. இணை நோய்கள் தொடர்பான சான்றிதழ்களையும்கூட பயனாளிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், கரோனா வைரஸ் குறித்தும் அடிக்கடி மக்களுக்கு எழும் கேள்விகளும் பதில்களும், நம்பிக்கையை உருவாக்கும் வகையில் கரோனா தடுப்பூசி குறித்து உள்ளூர் மருத்துவர்களின் உரையாடல்கள், மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் அனுபவங்கள் ஆகியவை வழங்கப்படும்.
இந்தத் தகவல்கள் பயனாளிகள் ஆங்கிலம் மற்றும் தமிழ் இரு மொழிகளிலும் பெறலாம். இரு வழி தகவல்தொடர்பு என்பதால், பயனாளிகள் தங்களின் கருத்துகளை அனுப்பலாம். சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்.
இந்த இணையதள https://wa.me/919319357878?text=covas லிங்க்கின் மூலமும் அல்லது +91 9319357878 எனும் எண்ணுக்குத் தொடர்புகொண்டு பேசவோ அல்லது வாட்ஸ் அப் மூலம் "covas or cobas'' என்று டைப் செய்து பெறலாம். https://tnhealth.tn.gov.in/tngovin/dph/dphpm.php இந்த லிங்க்கின் மூலமும் தகவல்களைப் பெறலாம். இதனை யுனிசெஃப் தெரிவித்துள்ளது.