

சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தின் மூன்று கிளைகளில் வேலை பார்க்கும் 40 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து மற்றவர்களைப் பரிசோதிக்கும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.
சென்னை பெருங்குடியில் மருந்து சம்பந்தமான ஆலோசனை வழங்கும் தனியார் நிறுவனத்தின் 3 கிளைகள் இயங்குகின்றன. இங்கு இரண்டு நாட்களுக்கு முன் 2 பேருக்குக் காய்ச்சல் வந்ததால் சந்தேகப்பட்டுப் பரிசோதனை செய்ததில் இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அந்தக் கிளைகளில் தொடர்பில் உள்ளவர்களைப் பரிசோதித்தபோது 40 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியானது.
ஒரு கிளையில் உள்ள ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டு அவர் மற்ற 3 கிளைகளுக்கும் சென்று வந்ததில் அங்குள்ளவர்களுக்குத் தொற்று பரவியது தெரியவந்தது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மூன்று நிறுவனங்களையும் உடனடியாக மூட உத்தரவிட்டனர். ஊழியர்கள் 364 பேருக்கு உடனடியாகப் பரிசோதனை நடத்தப்பட்டது.
ஊழியர்களை வீட்டில் தனிமைப்படுத்தவும், நிறுவனத்தை முழுவதுமாக கிருமி நாசினி தெளித்து பழைய நிலைக்கு வந்தபின்னர் திறக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் மீண்டும் கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கிய நிலையில் சென்னையில் கரோனா கொத்தாகப் பரவும் இடங்களும் அதிகம் கண்டறியப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.