பாஜகவுடன் சமாதானம்: தனித்துப் போட்டியிட முடிவு எடுத்திருந்த பாமக வேட்பாளர்கள் 10 பேரின் மனுக்களும் புதுச்சேரியில் வாபஸ்

பாஜகவுடன் சமாதானம்: தனித்துப் போட்டியிட முடிவு எடுத்திருந்த பாமக வேட்பாளர்கள் 10 பேரின் மனுக்களும் புதுச்சேரியில் வாபஸ்
Updated on
1 min read

பாஜகவுடன் சமாதானம் ஏற்பட்டதால் தனித்துப் போட்டியிட முடிவு எடுத்திருந்த பாமக வேட்பாளர்கள் 10 பேரின் மனுக்களும் புதுச்சேரியில் வாபஸ் பெறப்பட்டன.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. பேச்சுவார்த்தையில் ஐந்து தொகுதிகளை பாமக கேட்டிருந்தது. ஆனால், தொகுதிப் பங்கீட்டில் பாமகவை பாஜக சேர்க்கவில்லை. இறுதியில் ஒரு தொகுதியும் கூட பாமகவுக்கு பாஜக ஒதுக்கவில்லை.

இதையடுத்து பாமக மாநில அமைப்பாளர் தன்ராஜ், பாஜக அணிக்கு கெடு விதித்தார். அதை பாஜக கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து பாமக தரப்பில் 10 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். பாமக தனித்து இத்தேர்தலைச் சந்திக்க உள்ளதாகக் குறிப்பிட்டனர்.

இந்நிலையில் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறும் நாளான இன்று 10 பாமக வேட்பாளர்களும் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர்.

இது தொடர்பாக பாமக மாநில அமைப்பாளர் தன்ராஜிடம் கேட்டதற்கு, "பாஜக தரப்பில் பேசினர். உரிய மரியாதை தருவதாக உறுதி தந்தனர். மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக பாமக தரப்பில் வேட்புமனுத் தாக்கல் செய்த 10 பேரின் மனுக்களும் திரும்பப் பெறப்பட்டன" என்று குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in