பாஜக வேட்பாளர் ஜான்குமார் மீது 117 பக்கம் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல்

பாஜக வேட்பாளர் ஜான்குமார் மீது 117 பக்கம் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல்
Updated on
1 min read

இடைத்தேர்தலில் காங்கிரஸில் போட்டியிட்டபோது பிரமாண பத்திரத்தில் உண்மை தகவல்களை தெரிவிக்காததால் தற்போதைய பாஜக வேட்பாளர் ஜான்குமார் மீது 117 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கலாகியுள்ளது.

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் 2019ம் ஆண்டு நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஜான்குமார் நின்று வெற்றி பெற்றார். அப்போது அவர் தாக்கல் செய்த ஆவணங்களில் ஒரு சொத்தை மறைத்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.

தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தேத்தாம்பாக்கம் கிராமம், குமாரப்பாளையத்தில் ஜே.வி.ஆர். நகரில் வீட்டு மனை அமைந்துள்ள ரூ. 4.5 கோடி மதிப்புள்ள 2.4 ஹெக்டேர் நிலத்தைக் குறிப்பிடாமல் அரசையும், தேர்தல் ஆணையத்தையும் திட்டமிட்டு ஏமாற்றும் நோக்கில் செயல்பட்டுள்ளதாக புதுச்சேரி போராளிகள் இயக்கப் பொதுச்செயலர் செல்வமுத்துராயன் புதுச்சேரி முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 1ம் தேதி மனுதாக்கல் செய்தார்.

இந்தமனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க ஒதியஞ்சாலை போலீஸாருக்கு உத்தரவிட்டனர்.
அதைத்தொடர்ந்து முதன்மை குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்பாக இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் அப்போது ஜான்குமார் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடியானது. அதைத்தொடர்ந்து ஒதியஞ்சாலை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். தேர்தலில் உண்மையை மறைத்து மனு தாக்கல் செய்தல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவானது. இந்த நிலையில் ஜான்குமார் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்து விட்டு பாஜகவுக்கு சென்றுவிட்டார்.

தற்போது நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் இடைத்தேர்தல் வழக்கு மீதான குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதனை அரசு வழக்கறிஞர் பிரவீன்குமார், தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 117 பக்கங்கள் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் 15 சாட்சிகள், 16 ஆவணங்கள்,13 வாக்குமூலங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெற உள்ள சட்டபேரவை தேர்தலில் பாஜக சார்பில், காமராஜர் நகர் தொகுதியில் ஜான்குமார் போட்டியிடுகிறார். அவரது மகன் ரிச்சர்ட்ஸும் பாஜகவில் நெல்லித்தோப்பில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in