

திருச்சி மாவட்டத்தில் கரோனாவால் நாள்தோறும் 20 பேர் வரை பாதிக்கப்பட்டு வருவதால், பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதுடன், தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு அறிவுறுத்தினார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கன்டோன்மென்ட் கிளை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள விழிப்புணர்வுப் பிரசுரங்களை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சு.சிவராசு இன்று வெளியிட்டு, வாக்காளர்களுக்கு விநியோகித்தார்.
நிகழ்ச்சியில் திருச்சி கோட்டாட்சியர் என்.விஸ்வநாதன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளர் கே.வேலாயுதம், உதவிப் பொது மேலாளர் கங்காதரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் க.சத்தியநாராயணன், நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் என்.எம்.மோகன் கார்த்திக், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் திரு.கே. ரவி உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் ஆட்சியர் சு.சிவராசு கூறியது:
தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் கரோனா 2-வது அலை பரவல் அதிகரித்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் கரோனா பரவல் கட்டுக்குள் இருந்தது. கடந்த வாரங்களில் ஒரு நாளைக்கு 10 பேர் முதல் 13 பேர் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு நாளைக்கு 15 பேர் முதல் 20 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு, பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காததும், முகக்கவசம் அணியாததுமே காரணம்.
இதே நிலை தொடர்ந்தால், கடந்த ஆண்டைப்போல் மீண்டும் பல்வேறு வழிகளில் பாதிப்பு நேரிடும். ஊரடங்கால் எப்படியெல்லாம் பாதிப்புக்கு உள்ளானோம் என்பதை உணர்ந்து, மீண்டும் அதே நிலை நேரிடாத வகையில் மக்கள் அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதுடன், தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
தேர்தல் பிரச்சார நிகழ்வுகளின்போது முகக்கவசம் அணியாமல் இருந்தால் வழக்குப் பதிவு செய்யப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படும்.
அஞ்சல் வாக்கு
திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் 18,800 பேரில், 14,300 பேர் அஞ்சல் வாக்கு செலுத்த விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் அனைவரும் அடுத்த தேர்தல் பயிற்சி வகுப்பின்போது தங்கள் அஞ்சல் வாக்கைச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, திருச்சி மாவட்டத்தில் 80 வயதைக் கடந்த மற்றும் மாற்றுத்திறனாளிகள் 6,800 பேரின் இல்லத்துக்கே சென்று அஞ்சல் வாக்கு சேகரிக்கப்படும்."
இவ்வாறு ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்தார்.