

புதுச்சேரியைத் தமிழகத்தோடு இணைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. தேர்தலுக்காக தவறான பிரச்சாரத்தை முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்கிறார் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குற்றம் சாட்டினார்.
புதுச்சேரியில் மத்திய அரசின் திட்டங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக நிறைவேற்றப்பட்டுள்ளது தொடர்பான கையேட்டை பாஜக அலுவலகத்தில் வெளியிட்டு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:
''சாகர்மாலா திட்டத்தில் அனைத்து ஒப்புதலும் புதுச்சேரிக்குத் தரப்பட்டுள்ளது. சில திட்டங்கள் ஒப்பந்த நிலையிலும், இறுதி நிலையிலும் உள்ளன. மேலும், சாலை திட்டங்களில் நில ஆர்ஜித நிலுவையும் உள்ளது. அதன் பொறுப்பு மாநில அரசுக்கு அதிக அளவில் உள்ளது.
புதுச்சேரி சாலை போக்குவரத்துக்கு ஆயிரக்கணக்கான கோடி நிதியை ஒதுக்கிப் பணிகள் நடக்கின்றன. புதுச்சேரி மாநிலம் பொருளாதார ரீதியாக உயர நாட்டின் பல்வேறு பகுதிகளை இணைக்க தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நெடுஞ்சாலைப் பணிகள் புதுச்சேரி வழியாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகம் மற்றும் புதுச்சேரி சாலை மார்க்கத்துக்காக 287 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.11 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு சாலை போக்குவரத்துத் துறை மூலம் ரூ. 20 ஆயிரம் கோடிக்குத் திட்டங்கள் மொத்தமாகச் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட உள்ளன. இது புதுச்சேரிக்கு சமூகப் பொருளாதார நிலையை மாற்றி உயர்த்தும். பாஜக அரசு அமைந்தால் இரட்டை இன்ஜின் வேகத்தில் வளர்ச்சி புதுச்சேரியில் இருக்கும்.
கன்னியாகுமரி - புதுச்சேரி மற்றும் புதுச்சேரி- சென்னை கடல் வழி போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். புதுச்சேரியில் உள்ள மீனவர்கள் பத்து நாட்டிக்கல் மலை தொலைவு சென்று மீன்பிடித்து வருகின்றனர். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மீன்கள் பிடிக்க வசதியாக 100 நாட்டிக்கல் மைல் தொலைவு வரை சென்று மீன்பிடிக்கும் திட்டம் வகுக்கப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியைத் தமிழகத்தோடு இணைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. தேர்தலுக்காகத் தவறான பிரச்சாரத்தை முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்கிறார். நம்பிக்கை இழக்கும் கட்சிதான் இதுபோன்ற செயலில் இறங்கும்.
மாநில அந்தஸ்து தருவது நூறு சதவீத சிந்தனையில் உள்ளது. வரும் ஆட்சி இதுபற்றி முடிவு எடுக்கும்''.
இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்.