

கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி அடைந்ததால் தமிழ்நாட்டு மக்கள் மீது மோடிக்கு மிகப்பெரிய கோபம் இருப்பதாக உதயநிதி தெரிவித்துள்ளார்.
மதுரையில் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குக் கேட்டும் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
''பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்து புதிய கல்விக் கொள்கையை உருவாக்கியுள்ளது. அனைத்து உயர் கல்விக்கும் அதாவது பி.காம், பி.ஏ., பிஎஸ்சி, நர்சிங் என அனைத்துக்கும் நுழைவுத் தேர்வைக் கொண்டுவர உள்ளனர்.
கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி அடைந்ததால் தமிழ்நாட்டு மக்கள் மீது மோடிக்கு மிகப்பெரிய கோபம். அதனால் நம்மிடம் வாங்கிய ரூ.15,000 கோடி ஜிஎஸ்டி பணத்தை நமக்குத் தரவில்லை.
கரோனா காலத்தில் 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இரண்டு விமானங்களை மோடி வாங்கியுள்ளார். தமிழகத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய் தருவதாகக் கூறிய மோடி, இப்போது ரூ.500 கோடி தந்துள்ளார். அதற்குக் காரணம் தேர்தல் வருவதுதான்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அறிவித்தார். புதிய இந்தியா பிறக்கப் போவதாகவும் அறிவித்தார். ஆனால் நடந்ததா?
திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்கள் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும், பெட்ரோல் விலை குறைக்கப்படும், கேஸுக்கு மானியம் எனப் பல்வேறு திட்டங்களை ஸ்டாலின் அறிவித்துள்ளார். குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 என 12 மாதங்களுக்கு ரூ.12,000 தொகையையும் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தொகுதியில் பட்டா பிரச்சினை, குடிநீர் பிரச்சினை, பாதாள சாக்கடை பிரச்சினை எனப் பல்வேறு பிரச்சினைகளைக் கூறினார்கள். திமுக ஆட்சியில் இந்தக் குறைகள் அனைத்தும் உடனடியாகச் சரி செய்யப்படும். அதற்காக உறுதுணையாக நிற்கக்கூடிய தளபதியை வெற்றிபெறச் செய்யுங்கள். கலைஞரின் பேரனாக இருந்து இதனை உங்களிடம் நான் கேட்கிறேன்''.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் வடக்கு மாவட்டத் திமுக பொறுப்பாளர் பொன் முத்துராமலிங்கம், மாநகர் மாவட்டக் காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் செய்யது பாபு மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
முன்னதாக, உதயநிதி ஸ்டாலினுக்கு 2 அடி நீள வாள் பரிசளிக்கப்பட்டது. அவருக்கு அணிவிப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட ஆளுயர மாலையை வெற்றி மாலை எனக் கூறி மதுரை வடக்கு திமுக வேட்பாளர் கோ.தளபதிக்கு உதயநிதி அணிவித்தார்.