திமுகவுக்கு மூடு விழா; இது இறுதித் தேர்தலாக அமைய வேண்டும்: முதல்வர் பழனிசாமி

திமுகவுக்கு மூடு விழா; இது இறுதித் தேர்தலாக அமைய வேண்டும்: முதல்வர் பழனிசாமி
Updated on
2 min read

மீண்டும் எதிர்க்கட்சி அந்தஸ்தையாவது தக்க வைத்துக்கொள்ள திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சிக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு ஆதரவு கேட்டு தமிழக முதல்வர் பழனிசாமி இன்று பாலக்கோட்டில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

''தமிழகத்தில் பல ஆண்டு காலம் திமுக ஆட்சியில் இருந்தது. அதேபோல, மத்தியில் ஆட்சியில் இருந்த கட்சியினருடனும் திமுக கூட்டணியில் இருந்தது. ஆனாலும், தமிழக மக்களுக்கு இதன் மூலம் எந்தப் பயனும் ஏற்படவில்லை. அதிமுக அரசு சிறுபான்மையினருக்கு எதிரானது என்பது போல திமுக சார்பில் பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. அதிமுக எப்போதும் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் இஸ்லாமியருக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் செல்வோருக்கு வழங்கப்பட்டு வந்த நிதியை அதிமுக அரசு உயர்த்தி வழங்கி வருகிறது. இந்த நிதி உதவி ரூ.6 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஹஜ் புனிதப் பயணம் செல்பவர்களுக்கு சென்னையிலே தங்குமிட வசதி வேண்டி வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று சென்னையில் ரூ.15 கோடி மதிப்பில் ஹஜ் இல்லம் கட்டப்படுகிறது.

தமிழகத்தில் பள்ளி வாசல்களில் சீரமைப்புப் பணி மேற்கொள்ள ரூ.5 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. ரம்ஜானுக்கு நோன்புக் கஞ்சி தயாரிக்க விலையில்லா அரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. நாகூர் தர்கா சந்தனக் கூடு திருவிழாவுக்கு ஆண்டுதோறும் சந்தனக் கட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

நாகூர் தர்காவி குளக்கரை அரசு செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சிறுபான்மையினர் உள்ளிட்ட தமிழக மக்களுக்கு எண்ணற்ற நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், தமிழகத்தில் சிறுபான்மை மக்களிடையே அதிமுகவினர் ஒற்றுமையோடு இருப்பதைச் சீர்குலைக்க திமுக முயன்று வருகிறது. அதிமுக என்றைக்கும் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பாகவும், அரணாகவும் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்க் கட்சியினரைக் குறைத்து மதிப்பிட்டுப் பேசுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். இத்தகைய நடவடிக்கைகளைக் கைவிட்டு மாற்றுக் கட்சியினருக்கு ஸ்டாலின் மதிப்பளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் மீண்டும் திமுக எதிர்க்கட்சியாக வர ஸ்டாலின் முயல வேண்டும். மீண்டும் எதிர்க்கட்சி அந்தஸ்தையாவது அவர் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்தத் தேர்தலில் திமுகவிற்கு மக்கள் மூடு விழா எடுக்க வேண்டும். இந்தத் தேர்தல் திமுகவிற்கு இறுதித் தேர்தலாக அமைய வேண்டும். 10 ஆண்டுகளாகப் பதவியில் இல்லாததால் ஸ்டாலின் விரக்தியின் விளிம்பில் இருக்கிறார். ஸ்டாலினுடைய முதல்வர் கனவு, கானல் நீராகும்.

அதிமுக ஒரு ஜனநாயகக் கட்சி. இங்கு சாதாரணத் தொண்டனும் முதல்வர் பதவியை வகிக்க முடியும். இந்தத் தேர்தலில் மக்கள் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்து மீண்டும் அதிமுக அரசு அமைய பேராதரவு வழங்கிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்''.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in