Published : 22 Mar 2021 02:15 PM
Last Updated : 22 Mar 2021 02:15 PM

அதிமுகவினர் தமிழகத்தையே விற்றுவிடுவார்கள்: உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

மதுரை

அதிமுகவினர் மூன்று ஆண்டுகளாக மோடியிடம் அத்தனை உரிமைகளையும் அடகு வைத்து விட்டனர், இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தையே விற்றுவிடுவார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார்.

மதுரையில் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குக் கேட்டு பிரச்சாரம் செய்தார். மேலும் மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் கோ.தளபதியை ஆதரித்து மதுரை செல்லூர் 50 அடி ரோட்டில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் மத்திய தொகுதியில் திமுக வேட்பாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனையும், அதனைத் தொடர்ந்து மதுரை மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் சின்னம்மாளையும், தெற்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் புதூர் பூமிநாதனையும் ஆதரித்து, வாக்குச் சேகரித்தார். இந்த இடங்களில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

''இதே தொகுதியில் சென்ற முறை நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியைத் தேடித் தந்தீர்கள். சேப்பாக்கம் தொகுதியில் முதன் முதலாக நிற்கிறேன். இதுதான் எனக்கு முதல் வாய்ப்பு. வெறும் 5 நாட்கள் மட்டுமே அங்கு பிரச்சாரம் செய்துவிட்டு இங்கு உங்களைத் தேடி வந்திருக்கிறேன்.

ஜெயலலிதாவின் சாவில் மர்மம் இருப்பதாக ஓபிஎஸ் கூறினார். அவரது சமாதிக்கு சென்று சென்றபோது ஆத்மா பேசியதாகவும் மர்மம் இருப்பதாகவும் விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும் என்றும் கூறினார். ஆனால் இன்னும் இறப்பின் மர்மம் வெளியாகவில்லை. ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அப்போலோ மருத்துவமனைக்குள் யாரையும் உள்ளே நுழைய விடவில்லை.

அமைச்சர்கள் போய்ப் பார்த்துவிட்டு வந்ததாகவும் அவர் இட்லி சாப்பிட்டார், ஜூஸ் சாப்பிட்டார், உப்புமா சாப்பிட்டார் எனவும் கூறினர். இந்தியாவில் மிகப் பெரிய மருத்துவமனை அப்பல்லோ மருத்துவமனை. மூலைமுடுக்கெல்லாம் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. ஆனால் ஜெயலலிதா உள்ளே இருந்த 80 நாட்களும் ஒரு சிசிடிவி கேமரா கூட வேலை செய்யவில்லை. இப்போது திண்டுக்கல் சீனிவாசன், ’மன்னித்துவிடுங்கள். நாங்கள் யாரும் போய் பார்க்கவில்லை’ என்கிறார்.

அதிமுகவினர் மூன்று ஆண்டுகளாக மோடியிடம் அத்தனை உரிமைகளையும் அடகு வைத்து விட்டனர், அடிமையாகிவிட்டனர். இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தையே விற்றுவிடுவார்கள். மக்கள் உரிமை பறிபோகும் நிலை ஏற்படும், தமிழகத்தில் எடுபிடியாக உள்ள எடப்பாடி எப்படி முதல்வர் ஆனார் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் பதவிக்காக நான் ஊர்ந்து போக என்ன பல்லியா? பாம்பா எனக் கேட்டுள்ளார், அவரைப் பற்றி சசிகலாவிடம் கேட்டால் தெரியும்.

மாணவர்களின் கல்வி உரிமையை நாம் விட்டுக்கொடுத்து விட்டோம். கலைஞர் நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்தார். ஜெயலலிதா இருந்தவரை நுழைவு தேர்வு தமிழகத்தில் நுழைய முடியவில்லை. அவரது மறைவுக்கு பிறகு மருத்துவத்துக்கு நீட் நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட்டது. 1,176 மதிப்பெண்கள் பெற்ற அனிதாவின் ஒரே கனவு மருத்துவராவது. ஆனால் அவரது கனவு நீட் தேர்வால் சிதைந்தது. தற்கொலை செய்துகொண்டார்.

அவரைப்போல் சுபஸ்ரீ, ஏஞ்சலினா உள்பட 14 பேர் நீட் தேர்வுக்குப் பயந்து தற்கொலை செய்துகொண்டனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 சதவீதம் நீட் தேர்வை ஒழித்துக் கட்டுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மக்களின் உரிமைகளைத் தட்டிப் பறித்த ஆட்சியை வீழ்த்த வரும் 6-ம் தேதி சரியான பாடம் புகட்டுங்கள். அதற்கு கோ. தளபதிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்''.

இவ்வாறு உதயநிதி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x