Published : 22 Mar 2021 12:59 PM
Last Updated : 22 Mar 2021 12:59 PM

சைதை துரைசாமி அல்ல தும்பிவாடி துரைசாமி; ரூ.8.70 கோடி வரி பாக்கி- மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை

சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர் உண்மையில் சைதை துரைசாமி அல்ல தும்பிவாடி துரைசாமி, ரூ.8.70 கோடி வரி பாக்கி வைத்துள்ளார் என்று அதே தொகுதியின் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை, சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் சைதை துரைசாமியும் திமுக சார்பில் மா.சுப்பிரமணியனும் போட்டியிடுகின்றனர். இருவருமே முன்னாள் மேயர்களாகத் தொகுதியில் சிறப்பாகப் பணியாற்றியவர்கள் என்பதால், போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மா.சுப்பிரமணியன் தனியார் தொலைக்காட்சிக்கு இன்று அளித்த பேட்டி:

''சைதாப்பேட்டையில் மக்களுக்கான ஏதாவது ஒரு நல்ல திட்டத்தைச் செயல்படுத்தி உள்ளேன் என்று சைதை துரைசாமி அடையாளம் காட்டினால் சிறப்பாக இருக்கும். சர்தார் படேல் சாலை மேம்பாலம், பஜார் சாலை மற்றும் ஜோன் சாலை சுரங்கப் பாதைகள், ஆட்டுதொட்டி தரை மேம்பாலம் ஆகியவை திமுக ஆட்சிக் காலத்தில் கட்டித் திறக்கப்பட்டவை. சைதையில் எந்தத் திட்டத்தை எடுத்துக் கொண்டாலும் அவை திமுக ஆட்சிக் காலத்தில் செய்ததாகத்தான் இருக்கும்.

சைதை துரைசாமி எத்தனை கோடி மனுக்கான தீர்வுகளைப் பெற்றுத் தந்திருக்கிறார் என்பதை மக்கள் முன்னிலையில் காண்பிக்க வேண்டும். சைதை துரைசாமி என்பது அவராக வைத்துக்கொண்ட பெயர். ஆனால் உண்மையிலேயே அவர் ஊர், கரூர் மாவட்டத்தில் உள்ள தும்பிவாடி. அவருக்குத் தும்பிவாடி துரைசாமி என்ற பெயர்தான் பொருத்தமாக இருக்கும்.

திமுக ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்பில் ஈடுபடுவார்கள் என்று குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. தேர்தல் நேரத்தில் இவ்வாறு குற்றம் சுமத்தப்படுவது சாதாரணமான விஷயம்தான். எந்த திமுக மாவட்டச் செயலாளர் எந்த மாவட்டத்தில் குறுநில மன்னராக இருக்கிறார்?

சைதை துரைசாமிகூடத் தனது வேட்புமனுத் தாக்கலில், ரூ.8.70 கோடி வருமான வரி பாக்கி இருப்பதாகத் தெரிவித்துள்ளார். வேட்பு மனுக்களைப் பொறுத்தவரை மின் கட்டணம், வீட்டு வரி, குழாய் வரி பாக்கிகள் இருக்கக்கூடாது. இதற்கான தடையின்மைச் சான்றிதழ்களைப் பெற்றுத் தர வேண்டும் என்று விதி இருக்கிறது. ஆனால் ரூ.8.70 கோடி வரி பாக்கி என்று அவர் தனது வேட்புமனுவிலேயே குறிப்பிட்டிருக்கிறார்.

இதை சுயேச்சை வேட்பாளர்கள் ஆட்சேபித்தனர். ஆனால் அவரைக் களத்தில் நேரில் சந்திக்க வேண்டும் என்பதாலேயே நான் அதை ஆட்சேபிக்கவில்லை''.

இவ்வாறு மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x