

முன் அறிவிப்பின்றி இரு மடங்கு விலை உயர்வும் செயற்கை தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் புதுச்சேரியில் அச்சக ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பை தெரிவித்து பணியாற்றி வருகின்றனர்.
கரோனா தொற்றால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ள சூழலில் அச்சு மூலப்பொருட்கள் தொடர் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சகங்கள் கடும் பாதிப்பில் உள்ளன. செயற்கை தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து புதுச்சேரியில் 500 அச்சகங்களில் பணியாற்றும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பை தெரிவித்தப்படி பணியில் இன்று ஈடுபட்டனர்.
புதுச்சேரி ஆப்செட் பிரிண்டர்ஸ் சொசைட்டி தலைவர் அருள் இளங்கோ கூறுகையில், " தொடர் விலை உயர்வால் கடும் பாதிப்பில் உள்ளோம். கார்ட் போர்டு, ஸ்ட்ரா போர்டு, ஆர்ட் பேப்பர் என அனைத்தின் விலையும் இரு மடங்காகியுள்ளது. முன் அறிவிப்பு இல்லாமல் காகிதத்தின் விலையை இரு மடங்காக காகித ஆலைகள் உயர்த்தியுள்ளன. இத்துடன் செயற்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பலரும் அதிக இருப்பை கையில் வைத்துக்கொண்டுள்ளனர்.
அச்சக சங்கத்தின் அகில இந்திய தலைவர் கமல்சோப்ரா அறிவுறுத்தப்படி, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல கருப்பு சட்டை அல்லது கருப்பு பட்டை அணிந்து எதிர்ப்பை தெரிவித்து இன்று பணியாற்றுகிறோம்" என்று குறிப்பிட்டனர்.