

துறைமுகம் தொகுதியில் தோல்வி பயத்தில் திமுகவினர் இருப்பதாக அத்தொகுதியின் பாஜக வேட்பாளரும் அக்கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளருமான வினோஜ் செல்வம் விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது. பாஜகவுக்கு அதிமுக கூட்டணியில் 20 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் சென்னை, துறைமுகம் தொகுதியில் பாஜகவின் மாநில இளைஞரணிச் செயலாளர் வினோஜ்.பி.செல்வம் போட்டியிடுகிறார்.
துறைமுகம் தொகுதி திமுக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இங்கு சேகர்பாபு தற்போது எம்எல்ஏவாக உள்ளார். இங்கு போட்டியிடும் வினோஜ் செல்வம் கடந்த 15-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்தார். வேட்பு மனுவின்போது வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரைக் குறிப்பிடாமல் மாற்றுப் பெயரைக் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இதைக் கடந்த 20-ம் தேதி பரிசீலனையின்போது சுயேச்சை வேட்பாளர் ஒருவர் ஆட்சேபித்ததை அடுத்து வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பெயர் சம்பந்தமான ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து நேற்று (மார்ச் 21) மதியம் வேட்பு மனு ஏற்கப்பட்டது.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய வினோஜ் செல்வம், ''திமுகவின் கோட்டை என்று கூறப்படும் துறைமுகம் தொகுதியில் பாஜக போட்ட ஓட்டை என்று தலைப்புச் செய்தி வரும் அளவுக்கு வெற்றிச் சரித்திரம் படைக்க நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறோம்.
தோல்வி குறித்த பதற்றத்தில் திமுகவினர் உள்ளனர். பதற்றம் இல்லையெனில் ஏன் ஒரு சுயேச்சை வேட்பாளருக்காக திமுக எம்எல்ஏ, எம்.பி. வரை வந்து போராடுகின்ற நிலை ஏன் தமிழகத்தில் ஏற்பட்டது?
திமுக வேட்பாளரின் வேட்பு மனு ஏற்கப்பட்ட நிலையில், அவருக்கு அங்கே என்ன வேலை. திமுகவினர் இப்படி நடந்து கொள்வதைப் பார்க்கும்போது, தோல்வி பயம் மட்டும்தான் அவர்களிடத்தில் தெரிகிறது'' என்று வினோஜ் செல்வம் விமர்சித்தார்.