Published : 22 Mar 2021 09:28 AM
Last Updated : 22 Mar 2021 09:28 AM

அதிமுக அமைச்சர்களை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு கூடுதலாக 50 சதவீதம் நிதி: கட்சி மேலிடம் தாராளம்

மதுரை

அதிமுக அமைச்சர்கள், பலம் வாய்ந்த முன்னாள் அமைச்சர்களை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு, மற்ற தொகுதிகளைக் காட்டிலும் கூடுதலாக 50 சதவீதம் தேர்தல் நிதி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுகவும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்ததுபோக நேரடியாக 131 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன.

ஆரம்பத்தில் அதிமுக, அமைச்சர்கள் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் திமுகவே வேட்பாளர்களை நிறுத்துவது என முடிவெடுக்கப்பட்டது. ஆனால், கூட்டணிப் பேச்சுவார்த்தையில் அமைச்சர்களை எதிர்த்து திமுக போட்டியிட இருந்த சில தொகுதிகளை கூட்டணிக் கட்சிகள் பெற்றுவிட்டன.

மீதமுள்ள தொகுதிகளில் அமைச்சர்களை எதிர்த்து திமுக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அதில், அமைச்சர்களை எதிர்த்து நிறுத்தப்பட்டிருக்கும் திமுக வேட்பாளர் பலர், பொருளாதாரத்தில் பெரும் பலம் படைத்தவர்கள் கிடையாது.

உதாரணத்துக்கு திருமங்கலம் தொகுதியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர் மணிமாறன், மதுரை மேற்குத் தொகுதியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூவை எதிர்த்துப் போட்டியிடும் சின்னம்மாள், நத்தம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை எதிர்த்துப் போட்டியிடும் ஆண்டிஅம்பலம் உள்ளிட்ட சில திமுக வேட்பாளர்கள், அமைச்சர்களை எதிர்த்து தேர்தல் செலவு செய்யக்கூடிய அளவிற்கு பணம் இல்லாமல் திண்டாடுகின்றனர்.

அதனால், அமைச்சர்களை எதிர்த்துப் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் திமுக கட்சித் தலைமை மற்ற வேட்பாளர்களுக்கு கொடுப்பதில் இருந்து 50 சதவீதம் கூடுதலாக தேர்தல் நிதி வழங்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து திமுக முக்கிய நிர்வாகிகள் கூறுகையில், ‘‘வேட்பாளர்களுக்கு பிரச்சார சுற்றுப்பயணத்தில் தினசரி உடன்வரும் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு சாப்பாடு, மற்ற செலவுகள், பிரச்சாரம் செய்யும் ஒவ்வொரு பாயிண்ட்டிலும் ஒலிப்பெருக்கி அமைக்க, பட்டாசு போட, அங்கு வேட்பாளர்கள் வருவதற்கு முன் திரட்டப்படும் கட்சியினருக்கு சாப்பாடு செலவு உள்ளிட்ட பல்வேறு செலவுகள் உள்ளன.

இதில், குறிப்பிட்ட செலவுகளை வேட்பாளர்களையேப் பார்க்கச் சொல்லி உள்ள திமுக தலைமை, கடைசிக் கட்டப் பிரச்சாரத்தின்போது கூடுதல் தொகையை வேட்பாளர்களுக்கு வழங்க உள்ளது.

அதற்காக அதிமுக அமைச்சர்கள், அக்கட்சியின் மற்ற வேட்பாளர்கள், அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்கள் என்ற மூன்று அடிப்படையில் திமுக வேட்பாளர்களுக்கு கட்சித் தலைமை செலவுக்கு பணம் வழங்க உள்ளது.

இதில், திமுகவின் மற்ற வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளைக் காட்டிலும் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கு 50 சதவீதம் கூடுதல் தேர்தல் நிதி வழங்க திட்டமிட்டுள்ளது, ’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x