

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை (தனி) ஆகிய 4 தொகுதிகளிலும் பணம் பட்டுவாடா, தேர்தல் விதிமீறல்கள், வேட்பாளர்கள் செலவு ஆகியவற்றைக் கண்காணிக்க நிலையான குழு, செலவினக் கண்காணிப்புக் குழு, பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், இக்குழுக்கள் 24 மணி நேரமும் முக்கியச் சாலைகளில் மட்டும் சுற்றி வந்து வாகனங்களைச் சோதனையிட்டன. இதனால் அதிகாரிகளின் கெடுபிடி சோதனைக்கு ஆளானது அப்பாவி வியாபாரிகளும், பொதுமக்களும் தான்.
அவர்களிடம் இருந்து ரொக்கம், நகைகள், புகையிலைப் பொருட்கள், நெல் மூட்டைகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து சுறுசுறுப்பாகச் செயல்படுவதுபோல் அதிகாரிகள் காட்டி கொண்டனர். ஆனால் கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம், பிரச்சாரங்களுக்குப் பெயருக்கு சென்று, வீடியோ எடுத்து வேட்பாளர்களின் செலவுகளை மட்டும் கண்காணித்தனர். அரசியல்வாதிகள், வேட்பாளர்களின் வாகனங்களை சோதனையிடாமல் தவிர்த்தனர்.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்துக்கு வந்த தேர்தல் பார்வையாளர்கள், அதிகாரிகள் பறிமுதல் செய்த பணம், பொருட்கள் குறித்த விவரங்களைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். எதுவுமே அரசியல்வாதிகளிடம் இருந்தோ, பணப் பட்டுவாடா செய்பவர்களிடம் இருந்தோ பறிமுதல் செய்யவில்லை என்பதால் அதிருப்தி அடைந்தனர்.
இதையடுத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரிகளையே தேர்தல் பார்வையாளர்கள் கண்காணிக்கத் தொடங்கினர். பார்வையாளர்கள் கொடுத்த நெருக்கடியால் கிராமங்கள், நகர் வீதிகளில் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளை தேர்தல் அதிகாரிகள் கண்காணிக்கத் தொடங்கினர்.
தேர்தல் அதிகாரிகளின் திடீர் சுறுசுறுப்பால் சில தினங்களுக்கு முன்பு கைப்பையில் வாக்காளர்கள் பெயருடன் நோட்டுப் புத்தகம், பணம் வைத்திருந்த அதிமுக ஒன்றியச் செயலாளர் உட்பட 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.