

தமிழக சட்டப்பேரவை தேர்தலில்234 தொகுதிகளிலும் களம் காணப்போகும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது. தாக்கல் செய்யப்பட்ட 7,255 மனுக்களில் 4,527 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.6-ம்தேதி நடைபெறுகிறது. முன்னதாக கடந்த 12-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதில், கரூர்மாவட்டத்தில் அதிகபட்சமாக 97மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இறுதி நிலவரப்படி 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 6,183 ஆண், 1,069 பெண், 3 மூன்றாம் பாலினத்தவர் என 7,255 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 22 ஆண்1 பெண் என 23 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. முழுமையான விவரங்கள் இல்லாத மனுக்கள், ஒன்றுக்குமேற்பட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இதில், நேற்று முன்தினம் சைதாப்பேட்டையில் அதிமுகவின்சைதை துரைசாமி, திருமங்கலத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ராசிபுரத்தில் திமுக வேட்பாளர் மதிவேந்தன் உள்ளிட்டோர் மனுக்கள், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக நீண்ட இழுபறிக்குப்பின் ஏற்கப்பட்டன.
இதுதவிர, சென்னை துறைமுகம் தொகுதியில் பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்தின் வேட்பு மனுவும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்றும் தொடர்ந்து வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. துறைமுகம் தொகுதியில், பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்தின் பெயரில் சுயேச்சைஒருவரும் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தார். இதுதவிர, பாஜக வேட்பாளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் மாறுபட்டிருந்ததால், மனுவை ஏற்கக்கூடாது என்றுதிமுக தரப்பில் கூறப்பட்டது. எனவே, பாஜக வேட்பாளர் மற்றும் அதே பெயரில் உள்ள சுயேச்சை வேட்பாளர் என இருவரையும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷகிலாஅழைத்திருந்தார்.
ஆனால், திமுக வேட்பாளர் சேகர் பாபு தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் மனுக்கள் பரிசீலனையின்போது தாங்களும்இருக்க வேண்டும் என்று கூறி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சாலைமறியலிலும் ஈடுபட்டனர். அதன்பின், பாஜக வேட்பாளரின் மனு ஏற்கப்பட்டது. அதேபோல், நாம்தமிழர் கட்சியின் முகமது கடாபி என்பவர் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 10 மணி நிலவரப்படி, தாக்கல் செய்யப்பட்ட 7 ஆயிரத்து 255 மனுக்களில், 2,726 மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன. 4,527 மனுக்கள் ஏற்கப்பட்டிருந்தன. சென்னை மாவட்டத்தில் அடங்கிய 16 தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட 417 மனுக்களில், 217 மனுக்கள் ஏற்கப்பட்டு 200 மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன. 4 தொகுதிகள் கொண்ட காஞ்சிபுரத்தில் தாக்கல் செய்யப்பட்ட 142 மனுக்களில் 76மனுக்கள் ஏற்கப்பட்டு, 66 நிராகரிக்கப்பட்டன. 10 தொகுதிகள் கொண்ட திருவள்ளூர் மாவட்டத்தில் தாக்கலான 314 மனுக்களில் 174 மனுக்கள் ஏற்கப்பட்டு, 140 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் தாக்கலான 196 மனுக்களில்119 மனுக்கள் ஏற்கப்பட்டு 77 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை மொத்தம் தாக்கலான 23மனுக்களில், 13 மனுக்கள் ஏற்கப்பட்டு 10 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து, இன்று மாலை 3 மணிவரை தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் தங்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, இன்று மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். அப்போது 234 சட்டப்பேரவை தொகுதிகள், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் இறுதிக்களம் காண்பவர்கள் யார் யார் என்பது தெரியவரும்.