

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி பாமக வேட்பாளர் கஸ்ஸாலியை ஆதரித்து தொகுதியில் பிரச்சாரம் செய்த அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி அதிமுக மக்கள் ஆட்சி. திமுக மன்னர் ஆட்சி என்று தெரிவித்தார்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் பாமக வேட்பாளராக அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் ஏ.வி.ஏ.கஸ்ஸாலி போட்டியிடுகிறார். வேட்பாளர் கஸ்ஸாலியை ஆதரித்து அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி நேற்று தொகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது வடக்குமண்டல இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அப்போது அன்புமணி பேசியதாவது: அதிமுக கூட்டணியின் பாமக வேட்பாளர் கஸ்ஸாலியை மாம்பழம் சின்னத்தில் வாக்களித்துவெற்றி பெற வைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.கடந்த முறை இதே தொகுதியில்போட்டியிட்ட கஸ்ஸாலி மீண்டும்போட்டியிடுகிறார். இந்த தேர்தல்என்பது ஒரு விவசாயிக்கும், ஒருவியாபாரிக்கும் நடக்கும் தேர்தல்.விவசாயி முதல்வர் பழனிசாமி. வியாபாரி மு.க.ஸ்டாலின். நமக்குவிவசாயி வேண்டுமா அல்லது வியாபாரி வேண்டுமா என்று கேட்டால் நிச்சயமாக விவசாயிதான் வேண்டும்.
வியாபாரியிடம் தமிழகம் சென்றால் தமிழகத்தை விற்றுவிடுவார்கள். இந்த தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் உதயநிதியை கேட்கிறேன். அவரது தாத்தா கருணாநிதி இந்த தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர். அவர் இந்த தொகுதிக்கு என்ன செய்தார். இப்போது பேரன் வந்துள்ளார். ஆனால், கஸ்ஸாலி அப்படி பட்டவர் இல்லை. இங்கே தான் இருக்கிறார். நாங்கள் மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசியலுக்கு வந்தோம். ஆனால், திமுக வியாபாரமாக பார்க்கிறது.
நான் இந்த தொகுதியின் மருமகன். என் மாமியார் வீடு இங்குதான் உள்ளது. என் மனைவி இங்கேதான் பிறந்து வளர்ந்து படித்தார். இன்னும் வீடு இருக்கிறது. திமுக ஒரு கட்சி இல்லை. அது ஒரு குடும்பம். அது ஒரு கம்பெனி. வழி வழியாக அவர்களுக்கு மட்டும் தான் உரிமை உள்ளது. திமுகவில் உழைத்தவர்கள் எல்லாம் ஓரம் கட்டப்பட்டுள்ளனர்.
கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, தயாநிதி என ஒரே குடும்பம் தான் வருகிறது. நம் மாநிலம் மக்கள் ஆட்சி. அதிமுக மக்கள் ஆட்சி. திமுக மன்னர் ஆட்சி. அதிமுக மக்கள் ஆட்சி என்பதால் ஒரு விவசாயி முதல்வராகவும், மற்றொரு விவசாயி துணை முதல்வராகவும் வரலாம்.ஆனால், மன்னர் ஆட்சியான திமுகவில் அப்பா, மகன், அவரது மகன், பின்னர் அவரது மகன் வருவார்கள். மு.க.ஸ்டாலின் மக்களையும், தனது கட்சிக்காரர்களை நம்பவில்லை. அதனால் தான் பிஹாரில் இருந்து பிரசாந்த் கிஷோர் என்பவரை அழைத்து வந்து, அவரிடம் பணம் கொடுத்து என்னை எப்படியாவது முதல்வராக்குங்கள் என கூறியுள்ளார். ஆனால், நாங்கள் மக்களை நம்புகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.