

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளர் தமிழரசி பரோட்டா, பிரைடு ரைஸ் தயாரித்து வாக்குச் சேகரித்தார்.
மானாமதுரை தொகுதியில் அதிமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ நாகராஜன், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தமிழரசி, அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ மாரியப்பன் கென்னடி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்று வரும் இத்தொகுதியைக் கைப்பற்ற திமுக, அமமுக போராடி வருகிறது. இதனால் வாக்காளர்களைக் கவர வேட்பாளர்கள் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர்.
அமமுக வேட்பாளர் மாரியப்பன்கென்னடி மோட்டார் சைக்கிளில் சென்று மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதிமுக வேட்பாளர் நாகராஜன் திருப்புவனம் தினசரி சந்தையில் காய்கறி வியாபாரியாக மாறி வாக்குச் சேகரித்தார்.
அதற்கு ஒருபடி மேலேபோய், திமுக வேட்பாளர் தமிழரசி மானாமதுரை பழைய பேருந்து நிலையத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது அங்குள்ள உணவகத்தில் பரோட்டா, பிரைடு ரைஸ் தயாரித்தார். அதை அவ்வழியாகச் சென்றவர்கள் ஆச்சரியமாகப் பார்த்தனர்.