

தேர்தலில் திமுக கூட்டணியை வாக்காளர்கள் ஏன் நிராகரிக்க வேண்டும் என்று 100 காரணங்களை பட்டியலிட்டு பாஜக புத்தகம்வெளியிட்டுள்ளது. புத்தகத்தை வெளியிட்ட தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி, திமுகவில் உட்கட்சி ஜனநாயகமும் கிடையாது, ஜனநாயகமும் கிடையாது என்றார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, ‘திமுக கூட்டணியை நிராகரிக்க 100 காரணங்கள்’ என்ற தலைப்பிலான புத்தகத்தை பாஜக தயாரித்துள்ளது. இந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நடந்தது. புத்தகத்தை தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி வெளியிட்டார்.
தேர்தலில் திமுக கூட்டணியை வாக்காளர்கள் ஏன் நிராகரிக்க வேண்டும் என்று 100 காரணங்களை பாஜக பட்டியலிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் பயிற்று மொழி தமிழாக இருந்த நிலையை மாற்றி,தமிழ் படிக்க வேண்டிய அவசியம்இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியதற்கு இவர்களே முக்கிய காரணம். மகாகவி பாரதியாரின் நினைவுதினத்தைக்கூட அனுசரிக்க மறந்தவர்கள் திமுகவினர். திமுக அங்கம்வகித்த காங்கிரஸ் தலைமையிலானகூட்டணி அரசு, தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை போட்டது. காங்கிரஸ் - திமுககூட்டணி அரசு வெளியிட்ட அறிவிக்கையில், காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் காளைகளும் சேர்க்கப்பட்டதால்தான் ஜல்லிக்கட்டுக்கு தடை உண்டானது.
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணைகளை கட்ட திமுக அரசு அனுமதி அளித்தது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து நம் உரிமைகளை திமுகவிட்டுக்கொடுத்தது. திமுக ஆட்சியில்தான் சென்னை கொலை நகரமாக மாறியது. சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டு சட்டத்துக்கு திமுக ஆதரவு அளித்தது.
இவை உட்பட 100 காரணங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
செய்தியாளர்களிடம் சி.டி.ரவி கூறியதாவது:
கருணாநிதிக்கு பின்னர் மு.க.ஸ்டாலின் வசம் திமுக உள்ளது. அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் வசம் செல்ல இருக்கிறது. திமுகவில் உட்கட்சி ஜனநாயகமும் கிடையாது, ஜனநாயகமும் கிடையாது. திமுக ஜனநாயக விரோத கட்சி.
அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று 2017-ம் ஆண்டில் இருந்து கூறிவந்தனர். ஆனால், அதிமுக 4 ஆண்டுகள் வெற்றிகரமாக ஆட்சிசெய்துள்ளது. பழனிசாமி எளிமையான முதல்வர், திறமையானவர், திறம்பட ஆட்சி செய்கிறார்.
பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி22-ம் தேதி (இன்று) வெளியிடுகிறார்.பாஜக மூத்த தலைவர்கள் அனைவரும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். பிரதமர் மோடி 2,3 முறை சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணைஅமைச்சர் வி.கே.சிங், கட்சியின் மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.