

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன் நேற்று கோட்டைமேடு பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, ஜமாஅத்உட்பட முக்கிய இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகளை சந்தித்துப்பேசினார்.
முன்னதாக, பி.கே.செட்டிவீதியில் மநீம தேர்தல் பணிமனையைத் திறந்துவைத்து, அப்பகுதியில் நடந்துசென்று வாக்குசேகரித்தார். அப்போதுசிலர் "தேர்தல் சமயத்தில் எங்களைத் தேடி வருகிறீர்கள், வெற்றி பெற்ற பிறகு வருவீர்களா?" என்று கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, சாமியார்புதூர் வீதியில் மக்களை சந்தித்தபோது, "இரவு நேரங்களில் போலீஸார் கெடுபிடி அதிகமாக உள்ளது. இளைஞர்களை சமூகவிரோதிகள்போல நடத்துகின்றனர். இதற்கு தீர்வு காண்பீர்களா?" என மக்கள் கேட்டனர்.
பின்னர், உக்கடம் வாலாங்குளத்தைப் பார்வையிட்ட கமல்ஹாசனிடம், அரசு மருத்துவமனையிலிருந்து வெளியாகும் கழிவுநீர் உட்பட பலதரப் பட்ட கழிவுகள் கலப்பதால், குளம் மாசடைந்து உள்ளதாகவும், இதற்குத் தீர்வுகாண வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கைவிடுத்தனர். அனைத்து கோரிக்கைகள் மீதும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த கமல்ஹாசன், பின்னர் அங்கிருந்துபுறப்பட்டுச் சென்றார்.