திண்டுக்கல் மாவட்டத்தில் 5 மணி நேரம் விடாமல் கொட்டிய மழை: கொடைக்கானல் மலைப்பாதையில் மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் 5 மணி நேரம் விடாமல் கொட்டிய மழை: கொடைக்கானல் மலைப்பாதையில் மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டத்தில் 5 மணி நேரம் தொடர்ந்து பரவலாக மழை கொட்டியது. மேலும் கொடைக்கானலில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மிதமான மழையே அவ்வப்போது பெய்துவந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் மாவட்டம் முழுவதிலும் பரவலாக லேசான மழைப் பொழிவு தொடங்கியது.

திண்டுக்கல்லில் நேற்று காலை 7.30 மணிக்கு தொடங்கிய மழை ஒரே சீராக பகல் 12.45 மணி வரை தொடர்ந்தது. இதனால் நகரின் சாலைகள், தெருக்களில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்தது.

14-வது வார்டு கோபால்நகர் மற்றும் 30-வது வார்டு திருமலைசாமிபுரம், ரயிலடி தெரு, இந்திராநகர் பகுதிகளில் மழை நீர் வெளியேற வடிகால் வசதியில்லாததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

திண்டுக்கல் அருகேயுள்ள சிறுமலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்று மாலை வரை தொடர்ந்து பெய்தது. வேடசந்தூர் அருகே கிழக்கு மாத்தினிப்பட்டியில் வீடு மீது மரம் விழுந்ததில் மதுமிதா (10) என்ற சிறுமி காயமடைந்தார்.

கள்ளிமந்தயம் அருகே திருவாண்ட புரத்தில் மின்கம்பம் நடும் பணியில் ஈடுபட்ட கோட்டத்துரையைச் சேர்ந்த தொழிலாளி காமராஜ்(35) மின்சாரம் பாய்ந்ததில் பலியானார். உடன் பணிபுரிந்த முருகன், செல்வக்குமார் ஆகியோர் காயமடைந்தனர். இதுபற்றி கள்ளிமந்தயம் போலீஸார் விசாரித்தன்றனர்.

பழநியில் நேற்று பெய்த மழையால் பகல் 12 மணி முதல் ரோப்கார் சேவை 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ரோப்கார் தொடர்ந்து இயக்கப்பட்டன.

கொடைக்கானலில் இருந்து வில்பட்டி செல்லும் சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் மலைக்கிராமங்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் சிரமப்பட்டனர். ஒரு மணி நேரத்தில் மண் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானது. கொடைக் கானலில் இருந்து வத்தலகுண்டு செல்லும் சாலையில் வாழைகிரி அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மலைக்கிராம சாலைகளில் ஆங் காங்கே சிறிய அளவிலான மண்சரிவுகள் ஏற்பட்டதை நெடுஞ்சாலைத் துறையின ரும், பேரிடர் மீட்புக் குழுவினரும் உடனடியாக ஜே.சி.பி. இயந்திரத்துடன் சென்று சீரமைப்பு பணியை மேற்கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in