Last Updated : 22 Mar, 2021 03:13 AM

 

Published : 22 Mar 2021 03:13 AM
Last Updated : 22 Mar 2021 03:13 AM

கோவை கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் தொழில் துறையினரின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படுமா?

கோவை

கோவை மாவட்டத்தில் பெரிய தொகுதியான கவுண்டம்பாளையம் தொகுதியில் மாநகராட்சியின் 22 வார்டுகள் அமைந்துள்ளன. இங்கு 2 லட்சத்து 29,997 ஆண்கள், 2 லட்சத்து 30 ஆயிரத்து 908 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 95 பேர் என மொத்தம் 4 லட்சத்து 61 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

கோவை வடக்கு தாலுகாவுக்கு உட்பட்ட வெள்ளமடை, கொண்டையம்பாளையம், எஸ்.எஸ்.குளம், நாயக்கன்பாளையம், தடாகம், ஆனைக்கட்டியின் குறிப்பிட்ட பகுதிகள், வீரபாண்டி, சின்னதடாகம்,நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், பன்னிமடை, கீரணத்தம், கள்ளிப்பளையம், வெள்ளாணைப்பட்டி கிராமங்களும், பெரியநாயக்கன்பாயைம், நரசிம்மநாயக்கன்பாளையம், இடிகரை பேரூராட்சிப் பகுதிகளும், விளாங்குறிச்சி, சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி, வெள்ளக்கிணறு, துடியலூர், கவுண்டம்பாளையம் பகுதிகளில் உள்ள கிராமங்களும் இத்தொகுதியில் அமைந்துள்ளன. கவுண்டர், ஒக்கலிக கவுடர் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ள இந்த தொகுதியில், இதர சமூக மக்களும் குறிப்பிட்ட அளவில் உள்ளனர். கவுசிகா நதி, அனுவாவி சுப்பிரமணியர் சுவாமி கோயில், காளப்பட்டி மாரியம்மன் கோயில் ஆகியவை தொகுதியின் அடையாளங்களாகும்.

இப்பகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம். மேலும், செங்கல் உற்பத்தி, சிறு, குறு மற்றும்நடுத்தர தொழில் நிறுவனங்களும் அதிக அளவில் உள்ளன.

கவுசிகா நதியை மேம்படுத்தல், ஆக்கிரமிப்பில் உள்ள நீர்வழித் தடங்களை மீட்பது, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க அவிநாசி சாலை-சத்தியமங்கலம் சாலையை இணைக்கும் சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்துவது, காளப்பட்டி நான்குமுனை சந்திப்பு பகுதியை அகலப்படுத்துதல், செங்கல் சூளைகளால் ஏற்படும் காற்று மாசுபாட்டை தடுத்தல், மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், தொகுதியை மையப்படுத்தி அரசு கலைக் கல்லூரி அமைத்தல் ஆகியவை இந்த தொகுதி மக்களின் முக்கியக் கோரிக்கைகளாகும்.

அதிமுக-திமுக நேரடிப் போட்டி

கடந்த தேர்தலைப்போலவே, இந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக-அதிமுக கட்சிகள் நேரடியாக மோதுகின்றன. திமுக சார்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட ஆர்.கிருஷ்ணனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதிமுக சார்பில் வி.சி.ஆறுக்குட்டிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக, கடந்த முறை கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, அதிமுக மாநகர் வடக்கு மாவட்டச் செயலர் பி.ஆர்.ஜி.அருண்குமார் போட்டியிடுகிறார்.

மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சி வேட்பாளர்களும் களம் காண்கின்றனர். தொகுதியில் நிலவும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதாக உறுதியளிப்பவருக்கே ஆதரவு என்று இந்த தொகுதியின் பொதுமக்கள் மற்றும் தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதேபோல, சர்வதேச விமானநிலைய விரிவாக்கப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும், புதிய தொழிற்பேட்டை அமைக்க வேண்டும், மோட்டார் பம்ப்செட், கிரைண்டர் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உதவ வேண்டும் என்பது இப்பகுதி தொழில் துறையினரின் நீண்ட நாள் கோரிக்கைகளாகும்.

இதுகுறித்து தொழில்துறையினர் கூறும்போது, " விமானநிலையத்தை விரிவுபடுத்தினால்தான், பல நாடுகளுக்கு நேரடி விமான சேவை கிடைக்கும். சரக்குகளை அனுப்புவதற்கான வசதிகளும் அதிகரிக்கும். முதலீடுகள் அதிகரித்து, தொழில்கள் வளரும். ஆனால், விமானநிலைய விரிவாக்கம் மிகவும் தாமதமாகிறது. இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகாண வேண்டும். அதேபோல, குறுந்தொழில் நிறுவனங்களுக்கென அரசு உதவியுடன் புதிய தொழிற்பேட்டைகளை அமைக்க வேண்டும்" என்றனர்.

கடந்த 2016-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகசார்பில் போட்டியிட்ட வி.சி.ஆறுக்குட்டி ஒரு லட்சத்து 10,870 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.கிருஷ்ணன் ஒரு லட்சத்து 2,845 வாக்குகள் பெற்றார். பாஜக சார்பில் போட்டியிட்ட ஆர்.நந்தகுமார் 22,444 வாக்குகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வி.ராமமூர்த்தி 16,874 வாக்குகளும் பெற்றனர். 2011-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக வேட்பாளர் வி.சி.ஆறுக்குட்டி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x