

தங்கள் கிராமத்துக்கு அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்க வரக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து, வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட வடக்குபாறைமேடு கிராம மக்கள் பேனர் வைத்துள்ளனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, "திவான்சாபுதூர் ஊராட்சியை அடுத்த வடக்குபாறைமேடு கிராமத்தில் 450-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். கேரள மாநில எல்லையோரம் அமைந்துள்ள இந்த கிராமத்துக்கு சாலை, குடிநீர், மயானம், பள்ளி உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் கேரள மாநிலத்தையே நம்பியிருக்க வேண்டிய சூழல் கடந்த 40 ஆண்டுகளாக நீடிக்கிறது. ஒவ்வொரு தேர்தலின்போதும் வாக்கு கேட்டு வரும் அரசியல் கட்சிவேட்பாளர்கள், கிராம வளர்ச்சிக்குதேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதியளிக்கின்றனர். ஆனால், மீண்டும் 5 ஆண்டுகள் கழித்துதான் கிராமத்துக்கு வருகின்றனர். எனவே, அரசியல் கட்சியினருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்க கிராமத்துக்கு வரக்கூடாது என்று பேனர் வைத்துள்ளோம்" என்றனர்.