

‘அம்மா இல்லம் திட்டம்’ மூலம் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு அரசே வீடு கட்டித் தரும் என்று கூறி முன்னாள் மேயரும், சைதை அதிமுக வேட்பாளருமான சைதை துரைசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, நேற்று சைதாப்பேட்டை கங்கை அம்மன் கோயில் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அப்பகுதி மக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
தேர்தல் பிரச்சாரத்தில் சைதை துரைசாமி பேசும்போது, “முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் இருவரும் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். மக்களுக்கு நலன்தரும் வகையில் பல்வேறு திட்டங்களை அதிமுக தேர்தல் அறிக்கையாக சமர்பித்துள்ளனர். அதிலுள்ள சிறந்த திட்டங்களில் ஒன்று, வீடில்லாத அனைவருக்கும் வீடு வழங்கும் “அம்மா இல்லம் திட்டம்”. குடியிருப்பதற்கு சொந்தவீடு இல்லாதவர்களுக்கு அரசே இடம் வாங்கி அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்படும். இந்த திட்டத்தை இப்பகுதியில் விரைந்து செயல்படுத்த, உங்கள் ஆதரவை தர வேண்டும்’’என்றார்.