

கள்ளக்குறிச்சித் தனி தொகுதியில் அதிமுகவேட்பாளராக எம்.செந்தில்குமார் அறிவிக்கப்பட்டார். இதற்கு நகர அதிமுக சார்பில்கடும் எதிர்ப்புக் கிளம்பியது. அதோடு, வேட்பாளரை மாற்றக் கோரி அதிமுக நகரச் செயலாளர் பாபு தலைமையில் 4 நாட்கள் தொடர் போராட்டமெல்லாம் நடைபெற்றது. இதனிடையே வேட்பாளர் செந்தில்குமார் தனது ஆதரவாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சிக்கு நேற்று முன்தினம் பிரச்சாரத்திற்கு வந்த போது, நகரச் செயலாளர் பாபு தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக பிரச்சார இடத்திற்கு வந்து சேர்ந்தார். அப்போது பலரும் அவரது வருகையை உற்று நோக்கினர்.
பிரச்சார இடத்திற்கு வந்த பாபு, அமைச்சர் சி.வி.சண்முகத்தை பார்த்து 3 முறை கை கூப்பி வணக்கம் செய்தார். அதை சி.வி. சண்முகம் கண்டும் காணாமல் அவரை பார்ப்பதை தவிர்த்தார். பின்னர் முன்னாள் அமைச்சர் மோகனோ, பாபுவைக் கண்டதும் வேறு பக்கம் முகத்தைத் திருப் பிக் கொண்டார்.
அப்போது கூட்டத்தில் இதை உற்று நோக்கிக் கொண்டிருந்த ரத்தத்தின் ரத்தத்திடம் பேச்சுக் கொடுத்தோம். வேட்பா ளருக்கு பலத்த எதிர்ப்புத் தெரிவித்த பாபு தனது ஆதரவாளர்களுடன் வந்திருக் கிறாரே, என்ன திடீர் மாற்றம் என்றோம். அதற்கு சுற்றும் முற்றும் பார்த்து பேசத் தொடங்கினார். உங்களுக்கு சேதி தெரியாதா! முதல்வர் சனிக்கிழமை வருகிறார் என்றதும், வெள்ளிக் கிழமை பெரம்ப லூரில் பிரச்சாரத்தை முடித்து எடப்பாடியில் தங்கியிருந்த முதல்வரை, பாபு தனது ஆதரவாளர்களுடன் 7 கார்களில் சென்று வெள்ளிக்கிழமை இரவு சந்தித்தார். முதல்வரோ, "முதலில் போய் தேர்தல் வேலையை பார். அடுத்து உள்ளாட்சித் தேர்தல் வருகிறது. வாரியங்கள் உள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளணும். அப்போது என்ன செய்யவேண்டும் என்று எனக்குத் தெரியும் என கூறி அனுப்பியதன் பேரில் இங்கு வந்திருக்கிறார்" என்றார். சரி அந்த சமாதானத்தில் சரியாகி விட் டாரா அல்லது ஏதாவது சன்மானம் அளிக்கப்பட்டதா என நாம் வினவிய போது, அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க. எதிர் முகாம் பத்தி சொல்றேன் கேளுங்க! எங்க பங்காளி ஒருத்தர் இருக்காரே அவர கட்சி வேட்பாளர் அறிவிப்பாங்கன்னு பார்த்தா, முரசுக்கு தொகுதி போயிடுச்சி. முரசு வேட்பாளர் கிட்ட போதுமான மணி இல்லை. அதனால் அவரு பிரச்சாரத்தையே இன்னும் தொடங்கலை. எங்க பங்காளி கட்சி மாவட்டச் செயலாளர் தனக்கு தொகுதி கொடுக்கலையேன்னு அவரு கட்சித் தேர்தல் அலுவலகம் பக்கமே வரல.
இதையறிந்த கை நிறைய மணி வைத் திருக்கும் ரத்தினமானவர், பங்காளி கட்சிக் காரங்கள பலமா கவனிச்சிக்கிட்டு வர்றாரு. மேலும் சிறுத்தைகளுக்கும் எந்த சிரமம் வைக்காம சிரிச்ச முகத்தோட அவங்களிடம் தோளோடு கை கோர்த்துக்கிட்டு இருக்காரு ரத்தினமானவர். உடன் பிறப்புகளை உற்சாகமாக வைத் திருக்க ஊக்க பானமும் அவ்வப்போது பரிமாறப்படுகிறதாம். 2014-ல் வேட்பாளராக ஆவதற்கே தடுமாறிய ரத்தினம், 2016-ல் ஒருவழியாக வேட்பாளராகி வாய்ப்பை இழந்தார். இந்த முறை வேட்பாளராகி சூறாவளிப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டிருக்கும் ரத்தனத்துக்கு சுக்கிர திசை தான் என்கின்றனர் கதர் துண்டுக்காரர்கள்.