

தேர்தல் விதிகளை மீறியதாக நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அக்கட்சியின் வேட்பாளர்கள் 7 பேர் உட்பட 458 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் வேட்பாளர்கள் பங்கேற்றனர். இரவு 9.50-க்குப் பேசத் தொடங்கிய சீமான் இரவு 10.10 மணி வரை பேசினார்.
தேர்தல் விதிப்படி இரவு 10 மணிக்குள் பிரச்சாரத்தை முடித்துக்கொள்ள வேண்டும். இதை மீறியது தொடர்பாக தேர்தல் கண்காணிப்பு அலுவலர் மோகன்ராஜ் புகார் தெரிவித்தார்.
அதன்பேரில் சீமான், வேட்பாளர்கள் செல்வக்குமார் (விருதுநகர்), ஆனந்த ஜோதி (திருச்சுழி), பிரியா (சிவகாசி), ஜெயராஜ் (ராஜபாளையம்), பாண்டி (சாத்தூர்), அபிநயா (ஸ்ரீவில்லிபுத்தூர்), உமா (அருப்புக் கோட்டை) மற்றும் 450 பேர் மீது விருதுநகர் மேற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.