Published : 22 Mar 2021 03:14 AM
Last Updated : 22 Mar 2021 03:14 AM

திமுகவின் வாக்குகளை பிரிக்க பாஜகவால் அனுப்பப்பட்ட மாய மான்களால் எதுவும் நடக்காது: திருச்சி காட்டூர் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கருத்து

திருச்சி

திமுகவின் வாக்குகளை பிரிக்க பாஜகவால் அனுப்பப்பட்ட மாய மான்களால் எதுவும் நடக்காது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம் திருவெறும் பூர் தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து காட்டூரில் நேற்று நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: அதிமுக அரசு யாருக்கும் நன்மை செய்யவில்லை. இவர்களது முதலாளி யான மோடியின் செயல்பாடுகள், அனைத்து தரப்பினரையும் கொதிநிலையில் வைத்துள்ளது. இவர் களிடமிருந்து நாடு எப்போது விடியும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கரோனா ஒரு கொடுமையான உயிர்க்கொல்லி நோய். இத்த கைய கரோனாவைவிட கொடுமை யான தொற்று பாஜக. இது ஆர்எஸ்எஸ், மதவெறி, பண வெறி போன்றவற்றுடன் சேர்ந்து கண்ணுக்குத் தெரியாத கிருமியாக வடக்கிலிருந்து வருகிறது. அதனை தடுப்பதற்கான தடுப்பு மருந்துதான் மு.க.ஸ்டாலின். அவரது சார்பில் நம்மை பாதுகாக்கும் முகக்கவசமாக அன்பில் மகேஷ் பொய்யா மொழி இத்தொகுதியில் நிறுத்தப் பட்டுள்ளார். அவரை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

திமுக தலைமையிலான கூட் டணி, கொள்கைக் கூட்டணி. இதை எதிர்க்கவும், திமுக வாக்குகளை பிரித்து, வெற்றியைத் தடுக்கவும் மாய மான்களைப் போல சிலரை பாஜக கூட்டணியினர் அனுப்பி யுள்ளனர். அந்த மாய மான்களால் எதுவும் நடக்கப் போவதில்லை.

அதிமுவினர் நமக்கு எதிரிகள் அல்ல. அரசியல் காரணங் களால் தற்போது விலகி நிற்கின்றனர்.இத்தேர்தலில் திமுக கூட்டணியினர் மீட்கப்போவது தமிழ கத்தை மட்டுமல்ல, அதிமுக எனும் கட்சியையும் சேர்த்துதான்.

தமிழகம் ஆபத்தான சூழலில் இருக்கிறது. புதிய கல்விக் கொள்கையின் மூலம் குலக்கல்வி முறையை மீண்டும் திணிக்க முயற்சிக்கின்றனர். இங்குள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு பதிலாக வட மாநிலத்தவர்கள் பணியில் நியமிக்கப்படுகின்றனர். ஈழத் தமி ழர்கள் இனப்படுகொலை தொடர் பான குற்ற விசாரணையில், இலங்கை அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு பேசி வருகிறது. எனவே, தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட காவி வெற்றி பெறக்கூடாது. இது பெரியார் மண். பாறை. இதில் ஒருபோதும் தாமரை மலராது. தற்போது அடிக்கும் அடியில், அவர்கள் இனிமேல் இந்த பக்கமே வரக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் ஆரோக்கியராஜ், மண்டலச் செயலாளர் ஆல்பர்ட், மாநில தொழிலாளரணி செயலாளர் சேகர், மாவட்டச் செயலாளர் மோகன்தாஸ், திமுக பகுதிச் செயலாளர் நீல மேகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x