

மக்களை பிரித்து அரசியல் ஆதாயம் தேட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முயல்கிறார் என திருவண்ணாமலையில் நடை பெற்ற பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
திருவண்ணாமலை தொகுதி பாஜக வேட்பாளர் தணிகைவேல் மற்றும் கீழ்பென்னாத்தூர் தொகுதி பாமக வேட்பாளர் செல்வகுமார் ஆகியோரை ஆதரித்து முதல்வர் பழனிசாமி திருவண்ணாமலையில் நேற்று மாலை வாக்கு சேகரித் தார்.
அப்போது அவர் பேசும் போது, “தமிழகத்தில் சாதி, மதம் சண்டை கிடையாது. தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது. சிறுபான்மையின மக்கள் பாது காப்பாக தொழில் செய்கிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தபோது, மதவாத கட்சி என தெரியாதா? அதிகாரம் எங்கு கிடைக்கிறதோ?, அங்கு மாறிக்கொள்வார்கள். ஆனால், அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி, நிலை யான எண்ணம் கொண்டது.
அவரவர் மதம், சாதி, கடவுள் அவர்களுக்கு புனிதமானது. ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரித்து பார்த்து அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார்.
கருணாநிதி இருக்கும்வரை ஸ்டாலினால் தலைவராக முடிய வில்லை. அவர்கள் குடும்ப அரசியல் செய்கிறார்கள். ஆட்சி மற்றும் அதிகாரத்துக்கு வர வேண் டும் என துடிக்கின்றனர். திமுக கம்பெனி. கார்ப்பரேட் கம்பெனி. கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்த ஒரே கட்சி திமுக. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி, திமுக ஆட்சிதான்.
திமுகவில் உள்ள சரிபாதி பேர் அதிமுகவை சேர்ந்தவர்கள்தான். எ.வ.வேலு, ரகுபதி, செல்வகணபதி என பல பேர் அதிமுகவில் இருந்து சென்றவர்கள்தான். திமுகவில் இருந்த பாதி பேர் வெளியேறி விட்டனர். திமுக கூடாரம் காலியாகிவிட்டது. மக்களை குழப்பி ஆட்சிக்கு வர துடிக்கின்ற னர். பொய்களை தெரிவித்து அரசியல் ஆதாயம் தேடுகின்றனர். மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள். அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி கூட்டணி” என்றார்.
முன்னதாக, திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் மாவட்ட அதிமுக அலுவலகத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
மும்முனை மின்சாரம்
செங்கத்தில் அதிமுக சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் நைனாக்கண்ணுவை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பேசும்போது, “விவசாயிகள் நலன் கருதி, அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் இரண்டு முறை பயிர் கடன் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். ‘நீட்' தேர்வில் நமது மாணவர்களால் வெற்றி பெற முடியாது என்பதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
அதன்மூலம் 435 மாணவர்கள் மருத்துவம், பல் மருத்துவ படிப் பில் சேர்ந்துள்ளனர். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக தொடர்ந்து 3 ஆண்டுகளாக மத்திய அரசின் விருதை தமிழக அரசு பெற்றுள்ளது. மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெறலாம்” என்றார்.