Last Updated : 21 Mar, 2021 06:47 PM

 

Published : 21 Mar 2021 06:47 PM
Last Updated : 21 Mar 2021 06:47 PM

கல்லல் அருகே வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா புகார்; அதிமுக மகளிரணி நிர்வாகி வீட்டில் சோதனை; ரூ.70 ஆயிரம் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே ஆளவந்தான்பட்டியில் அதிமுக மகளிரணி வீட்டில் சோதனையிட்ட வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள்.

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்வதாகப் புகார் எழுந்ததை அடுத்து அதிமுக மகளிரணி நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறை, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே ஆளவந்தான்பட்டியில் அதிமுக மகளிரணி நிர்வாகி ஆனந்தவள்ளி என்பவரது வீட்டில் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்வதாகத் தேர்தல் அதிகாரிகளுக்குப் புகார் சென்றது.

இதையடுத்து மதுரை வருமான வரித்துறை அதிகாரி பெருமாள் மற்றும் தேர்தல் பறக்கும்படை வட்டாட்சியர்கள் காளிமுத்து, உமாமகேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் ஆனந்தவள்ளி வீட்டில் சோதனையிட்டனர். அப்போது அங்கு ரூ.70 ஆயிரம் இருந்தது.

இதுகுறித்து ஆனந்தவள்ளி அதிகாரிகளிடம் கூறும்போது, வீடு பராமரிப்பிற்காக வங்கியில் கடன் வாங்கி வைத்திருப்பதாகக் குறிப்பிட்டார். ஆனால், அதற்குரிய ஆதாரத்தை அவரால் சமர்ப்பிக்க முடியாததால் 70 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அருகேயுள்ள அதிமுக நிர்வாகி சந்திரன் என்பவரது வீட்டிலும் அதிகாரிகள் சோதனையிட்டனர். ஆனால் அங்கு எதுவும் சிக்கவில்லை.

ஆனந்தவள்ளி கூத்தலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க இயக்குநராகவும் உள்ளார். மதியம் 1 மணிக்குத் தொடங்கிய இச்சோதனை, மாலை 5 மணி வரை நடந்தது. பிறகு அங்கிருந்து அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர்.

மேலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி சாத்தையா தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் அங்கு கூடினர். அவர்கள் தேர்தல் அதிகாரிகள் முறையாகச் சோதனையிடவில்லை என்று கூறி கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x