Published : 21 Mar 2021 05:10 PM
Last Updated : 21 Mar 2021 05:10 PM

நான் முறையாக முதல்வர் ஆனேன்; உங்கள் தந்தைதான் நெடுஞ்செழியனை ஏமாற்றி முதல்வர் ஆனார்: ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி பதில்

சென்னை

செல்லுமிடமெல்லாம் பெட்டி வைத்து மனு வாங்குகிறார் ஸ்டாலின், முதல்வர் ஆனவுடன் அந்த மனுக்களின் மீது 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்கிறார், இதெல்லாம் நடக்கின்ற காரியமா? யாரிடம் கதையளக்கிறார், ஸ்டாலின் முதல்வராகவும் முடியாது, பெட்டியின் சீலையும் உடைக்க முடியாது, பூட்டையும் உடைக்க முடியாது, என முதல்வர் பழனிசாமி பேசினார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அதிமுக கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது:

“மக்கள் செல்வாக்கு வாய்ந்த கட்சி அண்ணா தி.மு.க. அண்ணா தி.மு.க தலைமையிலான கூட்டணி, பலம் வாய்ந்த கூட்டணி, வெற்றிக் கூட்டணி. வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு செய்து பேசுவது, ஒருவரை இகழ்ந்து பேசுவது என தரம்தாழ்த்தி பேசும் ஒரே தலைவர் திமுக தலைவர் ஸ்டாலின் தான். அவர் உண்மையைப் பேசுவதே கிடையாது.

ஜெயலலிதா பதவியேற்ற 3 ஆண்டுகளிலே தடையில்லா மின்சாரம் வழங்கினார். அவர்கள் வழியில் வந்த அரசின் சிறந்த நிர்வாகத்தின் மூலம் தமிழகம் இன்றைக்கு மின் மிகை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. அதனால், புதிய புதிய தொழில்கள் தொடங்க முடிகிறது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கின்றது.

இதெல்லாம் ஸ்டாலினுக்கு தெரியாது. எனென்றால் அவருக்கு நாட்டு மக்களைப் பற்றியும் தெரியாது, நாட்டில் என்ன நடைபெறுகிறது என்றும் தெரியாது. யாராவது எழுதிக் கொடுத்தால் அதை வைத்துக் கொண்டு படிப்பார். ஆட்சியிலும் இல்லை, அதிகாரத்திலும் இல்லை இப்பொழுதே அதிகாரிகளை மிரட்டுகிறார்கள்.

ஏதோ முதல்வர் ஆனதைப் போல மிரட்டுகிறார். நானும் 4 வருடங்களாக முதல்வராக இருக்கின்றேன். ஒரு அதிகாரியைக் கூட மிரட்டியது இல்லை. அவர்களிடத்தில் தட்டிக் கொடுத்து வேலை வாங்க வேண்டும். அவர்களிடம் அன்பாக பேசி, அரசாங்கம் போடுகின்ற திட்டத்தை மக்களிடத்திலே கொண்டு போய் சேர்க்க வேண்டும். அரசாங்கம் போடும் சட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பு அதிகாரிகளுக்குத் தான் இருக்கின்றது.

அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டால்தான் அரசாங்கத்திற்கே பெயர் கிடைக்கும். எங்கள் அரசாங்கத்திற்கு பெயர் கிடைப்பதற்கு அதிகாரிகள் ஒரு காரணம். ஸ்டாலின் வேண்டுமென்றே, திட்டமிட்டு, நான் வந்தால் என்ன நடக்கும் என்று தெரியுமா? என்று அதிகாரிகளையே மிரட்டுகிறார்.

அவருடைய மகன் உதயநிதியும் மிரட்டுகிறார், அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? திமுகவில் இளைஞர் அணியில் ஒரு பொறுப்பு மட்டும்தான் அவருக்கு இருக்கிறது. அவருக்கும் இந்த அரசாங்கத்திற்கும் என்ன சம்பந்தம்? நாங்களெல்லாம் ஆட்சிக்கு வந்தால், என்று டிஜிபி அந்தஸ்தில் உள்ள போலீஸ் உயர் அதிகாரியையே மிரட்டுகிறார்.

ஆட்சி, அதிகாரத்தில் இல்லாதபோதே இவ்வளவு திமிர் இருக்கிறதென்றால் ஆட்சி, அதிகாரத்தை இவர்கள் கையில் கொடுத்தால் நாடு தாங்குமா? இவ்வாறு மக்களை, அதிகாரிகளை மிரட்டுவது திமுகவின் வரலாறு. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்று கிராமங்களில் சொல்வதைப்போல, மிரட்டியே பழக்கப்பட்டவர்கள் அவ்வாறுதான் செய்வார்கள்.

ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் திண்ணையில் அமர்ந்து ஒரு பெட்டியை வைத்து அதில் மக்களின் கோரிக்கைகளை மனுவாக போடச்சொல்லி அந்தப் பெட்டியை பூட்டி, சீல் வைத்து எடுத்துச் சென்று விடுகிறார். தான் முதல்வர் ஆனவுடன் அந்த மனுக்களின் மீது 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்கிறார். இதெல்லாம் நடக்கின்ற காரியமா? யாரிடம் கதையளக்கிறார். நீங்கள் முதல்வராகவும் முடியாது, பெட்டியின் சீலையும் உடைக்க முடியாது, பூட்டையும் உடைக்க முடியாது

எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவதற்கு ஊர்ந்து பேனேனாம். எனக்கு என்ன கால் இல்லையா? நான் என்ன பாம்பா, பல்லியா. ஊர்ந்தும் போகவில்லை, நகர்ந்தும் போகவில்லை. நடந்து போய் பதவியேற்றுக் கொண்டேன் ஸ்டாலின் அவர்களே. கருணாநிதி எவ்வாறு முதல்வராக ஆனார்.

அண்ணா மறைவுக்குப் பின்னர், நெடுஞ்செழியன் தான் முதல்வர் ஆவார், என அனைவரும் எதிர்பாத்த போது குறுக்கு வழியில் சென்று முதல்வர் ஆனவர் கருணாநிதி. நாங்கள் அப்படியெல்லாம் ஆகவில்லை. எங்களது சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெரும்பான்மையானோர் எங்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.

அதனால் முதல்வர் ஆனேன். ஆனால் கருணாநிதி, நெடுஞ்செழியனை ஏமாற்றி முதல்வர் ஆனார். ஆக இவர்கள் வந்த வரலாறு வேறு, நாங்கள் வந்த வரலாறு வேறு. ஒரு தலைவர் என்றால் தகுதி வேண்டும். பண்பு வேண்டும். அந்த தகுதியே இல்லாத தலைவர் என்றால் அது ஸ்டாலின் தான்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x