Published : 21 Mar 2021 03:05 PM
Last Updated : 21 Mar 2021 03:05 PM

போராடும் விவசாயிகளை புரோக்கர்கள் என்பதா? டெல்லிக்குச் சென்று அவர்களிடம் பேசும் தைரியம் உண்டா?- முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி

விவசாயிகளுக்குப் பச்சை துரோகம் செய்து வந்த முதல்வர் பழனிசாமி, தேர்தலுக்காக இப்போது பச்சோந்தியாக மாறி, மத்திய பாஜக அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்ப்போம் எனக் கூறியுள்ளார். போராடும் விவசாயிகளை கொச்சைப்படுத்திய முதல்வர் டெல்லி சென்று அவர்களிடம் விவாதிக்கத் தயாரா? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

உத்திரமேரூரில் திமுக, கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பேசியதாவது:

“மூன்று வேளாண்சட்டங்களை எதிர்த்து, கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி கீழம்பி பகுதியில் நான் தலைமை தாங்க, நம்முடைய கூட்டணிக் கட்சிகள் அத்தனையும் பங்கேற்க ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம்.

கையில் கருப்புக் கொடி ஏந்தி, இதே காஞ்சி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கீழம்பி பகுதியில், மத்தியில் இருக்கும் பாஜக ஆட்சி விவசாயிகளைக் கொடுமைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே 3 வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்ததை எதிர்த்து, அந்தப் போராட்டத்தைக் காஞ்சியில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் நடத்தினோம். அதற்குப் பிறகு பல போராட்டங்கள் நடத்தி இருக்கிறோம்.

ஆனால், இப்போது முதல்வர் பழனிசாமி, தேர்தல் அறிக்கையில் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து அதிமுக குரல் கொடுக்கும் என்று திடீர் ஞானோதயம் வந்தது போல, விவசாயிகளை ஏமாற்றுவதற்காக அந்த அறிவிப்பைச் சொல்லியிருக்கிறார்.

இதே முதல்வர் பழனிசாமி, இந்தச் சட்டத்திற்கு எதிராக நாம் போராடிய நேரத்தில், “ஸ்டாலினுக்கு விவசாயம் தெரியாது” என்று சொன்னார். அவருக்குத்தான் விவசாயம் தெரியுமாம்.

அவர் அடிக்கடி எங்கு சென்றாலும் நான் ஒரு விவசாயி, நான் ஒரு விவசாயி என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல; போராடுகின்ற விவசாயிகளைப் பார்த்துக் கொச்சைப்படுத்திப் பேசினார். இன்றைக்கும் டெல்லியில் 120 நாட்களைக் கடந்து போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவில் இருக்கும் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த விவசாயப் பெருங்குடி மக்கள் குடும்பம் குடும்பமாக, கடும் பனியைக்கூடப் பொருட்படுத்தாமல், வெயிலைப் பற்றிக் கவலைப்படாமல், மழையைச் சிந்தித்துப் பார்க்காமல், டெல்லியில் இன்றைக்கும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அவ்வாறு போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளைப் பார்த்து முதல்வர் பழனிசாமி, தரகர்கள், புரோக்கர்கள் என்று வாய் கூசாமல் சொன்னார். அவர்களை அழைத்துப் பேச வேண்டும் என்று நாம் தொடர்ந்து பிரதமருக்குக் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறோம். எனவே அவர்களை அழைத்துப் பேசினால் சரியாகிவிடும் என்பதை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். பாஜக ஆளும் மாநிலத்தின் முதல்வர்கள் கூட இதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் முதல்வர் பழனிசாமி - தரகர்கள், புரோக்கர்கள் என்று போராடும் விவசாயிகளைச் சொல்லி இருக்கிறார். உங்களுக்குத் தைரியம் இருந்தால், தெம்பு இருந்தால் டெல்லிக்குச் சென்று அங்கு போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளைச் சந்தித்துப் பேச நீங்கள் தயாரா?

ஏற்கெனவே அறிவித்த அறிவிப்பில் இருந்து உங்களுடைய உணர்வு, சுருதி மாறுவதற்கு என்ன காரணம்? தேர்தல் வருகிறது. அதனால் தான் பச்சைத் துண்டு பழனிசாமி இன்றைக்கு பச்சோந்தி பழனிசாமியாக மாறி மக்களை ஏமாற்றத் தொடங்கியிருக்கிறார்”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x