Last Updated : 21 Mar, 2021 02:32 PM

 

Published : 21 Mar 2021 02:32 PM
Last Updated : 21 Mar 2021 02:32 PM

முதல்வராக இருந்த நீங்கள் தேர்தலில் போட்டியிடாதது காங்கிரஸுக்குப் பின்னடைவா?- நாராயணசாமி பதில்

முதல்வராக இருந்த நீங்கள் தேர்தலில் போட்டியிடாதது காங்கிரஸுக்குப் பின்னடைவா என்பதற்கு நாராயணசாமி பதில் தந்துள்ளார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளை விமர்சித்து குற்றப்பத்திரிக்கை என்ற தலைப்பில் 8 பக்க கையேட்டை பாஜக வெளியிட்டுள்ளது. அதில் நாராயணசாமி அவரது மகன் மீது ஊழல் குற்றச்சாட்டும், மத்திய அரசு புதுச்சேரிக்கு அளித்த ரூ.15 ஆயிரம் கோடி என்னவானது என்பது பற்றி விசாரணை நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் நாராயணசாமி காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "வேட்பு மனு பரிசீலனை முடிந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல்களை தேர்தல் துறை மிக காலதாமதமாக ஒருநாள் கழித்து புதுச்சேரியில் கொடுக்கப்பட்டுள்ளது. இது விதிமுறைகளுக்கு மீறிய செயல். பாஜக அதிகாரம் மற்றும் பணபலத்தை வைத்து இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறது. மத்திய அரசின் அமைப்புகள் இங்கு வந்து முகாமிட்டுள்ளன. அதன்படி ஒருசில நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இது அதிகார துஷ்பிரயோகம்.

புதுச்சேரி அரசுக்கு ரூ.15 ஆயிரம் கோடியைப் பிரதமர் அனுப்பியதற்கான ஆதாரத்தையும், அதில் ஊழல் நடந்ததற்கான ஆதாரத்தையும் வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் அமித் ஷா தவறாகப் பேசியதாக பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். நான் எந்த விசாரணைக்கும் தயார்" என்று குறிப்பிட்டார்.

பின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நாராயணசாமி பதில் அளித்தார்.

முதல்வராக இருந்த நீங்கள் தேர்தலில் போட்டியிடாதது காங்கிரஸுக்குப் பின்னடைவாக இருக்காதா?

சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிட சோனியாவும், ராகுலும் வலியுறுத்தினார்கள். ஆனால். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி.சுப்ரமணியம் தேர்தலில் நிற்பதால், தேர்தல் பணிகளை கவனிப்பதற்காகவே நான் தேர்தலில் நிற்கவில்லை. பல மாநிலங்களில் முதல்வர்கள் தேர்தலில் நிற்கவில்லை. அது ஒரு காரணம் இல்லை. காங். தலைவர் தேர்தலில் நிற்பதால் எவ்வித மாற்றுக் கருத்தும் வராது.

தொகுதிகளைக் கேட்டுப்பெற்று விட்டு, ஏனாம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளரையே நிறுத்தவில்லையே?

ஏனாம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் திடீரென என்.ஆர்.காங்கிரஸை ஆதரித்ததால் அங்கு மாற்று வேட்பாளரைத் தேர்வு செய்ய காலதாமதம் ஏற்பட்டது. அந்தத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் கோலப்பள்ளி அசோக்குக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கும்.

பாஜக கூட்டணியை எப்படிப் பார்க்கிறீர்கள்? தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி இணைந்து பணியாற்றவில்லையே?

பாஜக கூட்டணியில் பெரிய கட்சி என்.ஆர்.காங்கிரஸ்தான். அக்கூட்டணி பாஜக தலைமையிலா, என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

பாஜக போட்டியிடும் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் சுயேச்சையாகப் போட்டியிடுவது அந்த அணிக்குப் பின்னடைவாக இருக்கும். அதேபோல் காங்கிரஸானது திமுகவுடன் ஒருங்கிணைந்து வேலை செய்ய அனைத்துத் தொகுதிகளிலும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x