Published : 21 Mar 2021 10:28 AM
Last Updated : 21 Mar 2021 10:28 AM

‘‘இது திராவிட மண்;பெரியார் மண்: மோடி மஸ்தான் வேலை தமிழ்நாட்டில் பலிக்காது’’ -ஸ்டாலின் பேச்சு

திருமங்கலம்

இது திராவிட மண், தந்தை பெரியார் பிறந்த மண், அண்ணா பிறந்த மண், கருணாநிதி பிறந்த மண், உங்களுடைய மோடி மஸ்தான் வேலைகளெல்லாம் இந்த தமிழ்நாட்டில் பலிக்காது என திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

திருமங்கலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று உரிமையோடு உங்களிடத்தில் ஆதரவு கேட்க வந்திருக்கிறேன்.

தென்பாண்டி மண்டலமாம் இந்த மதுரைக்கு வந்திருக்கிறேன். நெஞ்சில் ஈரமும் வீரமும் கொண்டிருக்கும் மக்கள் வாழும் இந்த மண்ணிற்கு வந்திருக்கிறேன். நீதி கேட்டு மதுரையில் இருந்து திருச்செந்தூர் வரையில் நடைபயணமாக சென்ற தலைவர் கலைஞர் அவருடைய மகன் ஸ்டாலின் உங்களிடத்தில் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்.

இப்போது மோடி - பழனிசாமி பிரச்சினைக்கு வருகிறேன். மோடியும் பழனிசாமியும் எந்த அளவிற்கு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. அதில் ஒரு முக்கியமான உதாரணம், எய்ம்ஸ் மருத்துவமனை.

அந்த எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கப் போகிறோம் என்று நாடாளுமன்றத்தில் 2015ஆம் ஆண்டு மோடி அவர்கள் அறிவித்தார். அதற்கு பிறகு 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்த நேரத்தில் மோடி அவர்களை அவசர அவசரமாக மதுரைக்கு அழைத்து வந்து அடிக்கல் நாட்டு விழா நடத்தினார்கள்.

இப்போது 2021. இதுவரையில் ஒரு செங்கல் கூட அங்கு வைக்கப்படவில்லை. எனவே தமிழ்நாட்டிற்கு மோடியும் பழனிசாமியும் எந்த நன்மையும் செய்ய மாட்டார்கள். அதற்கு உதாரணம் தான் இந்த மருத்துவமனை.

இந்தியாவில் மொத்தம் 15 மருத்துவமனைகள் தொடங்கப்படும் என்று மத்திய அரசின் சார்பில் மோடி அறிவித்தார். அதில் 14 மருத்துவமனைகளின் பணிகள் பல்வேறு மாநிலங்களில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இன்னும் அந்தப் பணி தொடங்கப்படவில்லை.

மற்ற மாநிலங்களுக்கு நிதியை மத்திய அரசே ஒதுக்கி, அந்த வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை. கேட்டால் ஜப்பானில் நிதி கேட்டிருக்கிறோம் என்று சொல்கிறார்கள். நான் கேட்கிறேன், தமிழ்நாடு என்ன ஜப்பானிலா இருக்கிறது? குஜராத் மாநிலத்தில் தற்காலிகக் கட்டடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட்டு கொண்டிருக்கிறது.

தமிழ்நாடு என்பது இந்தியாவில் இல்லையா? குஜராத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும்போது தமிழ்நாட்டுக்கு ஏன் முக்கியத்துவம் தரவில்லை. ஏனென்றால் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு நீங்கள் பூஜ்ஜியம் போட்டு கொடுத்து விட்டீர்கள்.

எனவே இப்போது மோடியும் பழனிசாமியும் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள். இந்த ஜோடியை குளோஸ் செய்ய வேண்டுமா? வேண்டாமா?

இந்த மதுரைக்கு எவ்வளவோ சிறப்புகள் இருக்கிறது. ஆனால் ஒரு அசிங்கமும் இருக்கிறது. அந்த அசிங்கத்தின் அடையாளம்தான் செல்லூர் ராஜூ - உதயகுமார் - ராஜன் செல்லப்பா. இந்த மூன்று பேருக்குள்ளும் கோஷ்டி தகராறுகள் நடந்து கொண்டு இருக்கின்றது. அதனால் இந்த மதுரை மாவட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஓ.பி.எஸ்-ஐ முதலமைச்சராக உட்கார வைத்தார்கள். அந்த ஓ.பி.எஸ்.க்கு துரோகம் செய்து சசிகலா தான் முதலமைச்சராக வரவேண்டும் என்று சொன்னவர் இவர்தான்.

சசிகலா ஜெயிலுக்குப் போன பிறகு பழனிசாமி தான் முதலமைச்சர் என்று சொன்னார். எவ்வளவு துரோகம் என்று பாருங்கள். வருவாய்த்துறை அமைச்சராக இருந்து தன்னுடைய வருவாயைத் பெருக்கிக் கொண்டாரே தவிர வருவாய்த் துறையை நல்ல முறையில் காப்பாற்றி, மக்களுக்கு பணியாற்றினாரா?

அதிமுக 10 ஆண்டுகாலமாக இந்தத் தமிழகத்தைச் சீரழித்து ஊழல் செய்து கொண்டிருக்கிறது. பொய் சொல்லிக் கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் உங்களை எல்லாம் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, தப்பித்தவறி கூட ஒரு அ.தி.மு.க. வேட்பாளர் கூட வெற்றி பெறக் கூடாது. பா.ஜ.க. வெற்றி பெறப்போவதில்லை. அது வாஷ் அவுட்.

மற்ற மாநிலங்களில் அமித் ஷாவும் மோடியும் தில்லுமுல்லு செய்யலாம். ஆனால் இது தமிழ்நாடு. இங்கு அவர்கள் தில்லுமுல்லு எடுபடாது. ஆனால் ஒரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றி பெற்றால் கூட அது அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அல்ல; பா.ஜ.க. எம்.எல்.ஏ. தான்.

அதற்கு ஒரு உதாரணம், தேனியில் வெற்றி பெற்ற பன்னீர்செல்வத்தின் மகன், அவர் அ.தி.மு.க. எம்.பி.யாக செயல்படவில்லை. பா.ஜ.க. எம்.பி.யாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

திமுக சார்பில் இன்றைக்கு உங்களிடம் கம்பீரமாக நின்று வாக்குக் கேட்கிறோம் என்றால் ஏற்கனவே நாங்கள் ஆட்சி பொறுப்பில் இருந்த போது என்னென்ன செய்தோம் – ஐந்து முறை கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து ஆட்சி நடத்திய போது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் ஆற்றிய திட்டங்களை கம்பீரமாக நெஞ்சை நிமிர்த்திச் சொல்கிறோம்.

இப்போது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறோம். அதில் சிலவற்றை மாத்திரம் உங்களுக்குக் குறிப்பிட்டு காட்ட விரும்புகிறேன். விவசாயிகளுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெற, நாம் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக சட்டமன்றத்தில் அந்த தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றப்போகிறோம்,

வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட் உருவாக்கப் போகிறோம், மீண்டும் உழவர் சந்தை உருவாக்கப்படும். நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 2500, கரும்பு டன்னுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படும், அனைத்து உணவுப் பொருட்களுக்கும் குறைந்த பட்ச ஆதார விலை, இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த வேளாண்துறையில் தனிப்பிரிவு, நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆய்வு மையம் உருவாக்கப்படும், மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த விவசாயிகள் அனைவருக்கும் இலவச மும்முனை மின்சாரம் வழங்கப்படும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். இது ஏற்கனவே கடந்த பொங்கலுக்கு முதல் நாள் போகி அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் பேசும் போது சொன்னேன். அதற்கு பிறகு முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் அதையே சொல்லியிருக்கிறார். நான் கேட்கிறேன், 10 வருடங்களாக இந்த புத்தி வரவில்லையா?

தமிழ் மண்ணில், இந்தியைத் திணித்து, நீட்டையும் கொண்டுவந்து திணித்து, அதன் மூலமாக மதவெறியைத் தூண்ட நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, இது திராவிட மண் - தந்தை பெரியார் பிறந்த மண் – அண்ணா பிறந்த மண் - நம்முடைய கலைஞர் பிறந்த மண். உங்களுடைய மோடி மஸ்தான் வேலைகளெல்லாம் இந்த தமிழ்நாட்டில் பலிக்காது.

அதனால் தமிழக மக்கள் வாக்களிப்பதற்கு முன்பு யோசித்து வாக்களிக்க வேண்டும். நம்முடைய சுய மரியாதையைக் காப்பாற்றுவதற்கான தேர்தல் இது.

இவ்வாறு ஸ்டாலின் உரையாற்றினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x