

நான் விவசாயி என்றால் ஸ்டாலினுக்கு கோபம் வருகிறது, ஸ்டாலினைப் போன்றவர்கள் ஏசி ரூமில் உட்காந்து கொண்டு இருப்பதால், அவர்களுக்கு நம்முடைய கஷ்டம் எல்லாம் தெரியாது என முதல்வர் எடப்பாடிபழனிசாமி பேசினார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடிபழனிசாமி விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஆற்றிய உரை :
மயிலம் தொகுதியில் போட்டியிடுகின்ற பா.ம.க. வேட்பாளார் சி. சிவக்குமார், செஞ்சி தொகுதியில் போட்டியிடுகின்ற பா.ம.க. வேட்பாளார் எம்.பி.எஸ். இராஜேந்திரனுக்கும் மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள். இந்த இரண்டு தொகுதியில் விவசாயிகள் நிறைந்த பகுதி, உழைக்கும் வர்க்கத்தினர் நிறைந்த பகுதி. அவர்களுடைய வாழ்வு ஏற்றம் பெற வேண்டும் என்பதற்காக இந்த வலிமையான கூட்டணி, வெற்றிக் கூட்டணியை அமைத்து நாம் போட்டியிடுகின்றோம்.
நான் ஒரு விவசாயி, விவசாயியாக பிறந்ததே நான் செய்த பிறவி பயன் என்று கருதி வருகிறேன். நான் விவசாயி என்றால் ஸ்டாலினுக்கு கோபம் வருகிறது. ஸ்டாலினைப் போன்றவர்கள் ஏசி ரூமில் உட்காந்து கொண்டு இருப்பதால், அவர்களுக்கு நம்முடைய கஷ்டம் எல்லாம் தெரியாது. பாடுபடாமல் சுக வாசியாக இருப்பவர் ஸ்டாலின்.
அரசு பள்ளிகளில் 41 சதவிகித ஏழை, எளிய மாணவர்கள் படித்து வருகிறார்கள். ஏழை எளிய மாணவர்களும் மருத்துவ படிப்பை பயில வேண்டும் என்பதற்காக அம்மாவுடைய அரசு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளது. நான் கிராமத்தில் பிறந்தவன். அதனால் கிராம மக்களின் தேவையை நன்கு அறிந்து, அவர்கள் பயன்பெறும் வகையில் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறேன். கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் பயின்ற 6 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவம் பயில இடம் கிடைத்தது.
7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை செயல்படுத்திய காரணத்தினாலே இந்த ஆண்டு 313 அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் பயிலவும், 92 மாணவ, மாணவிகளுக்கு பல் மருத்துவம் பயிலவும் வழிவகை செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளது, இதன் மூலம் 1650 புதிய மருத்துவ படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இதனால், உள் ஒதுக்கீட்டின் மூலம் கூடுதலாக 130 மருத்துவ படிப்புக்கான இடங்கள் கிடைக்க உள்ளது. இதனால், அடுத்தாண்டு முதல் 443 பேருக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பை உருவாக்கித் தந்த அரசு அம்மாவின் அரசு. அதேபோல, பல் மருத்துவம் பயில 150 ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு எம்.பி.பி.எஸ். சீட் பெற்றுத்தந்துள்ளீர்கள். நாங்கள் அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள் எங்களால் கல்வி கட்டணத்தை செலுத்த சிரமமாக உள்ளது என கோரிக்கை வைத்தார்கள்.
அதனை ஏற்று, இதற்குண்டான கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும் என அறிவித்து, ஏழை எளிய மக்கள் பெற்றெடுத்த குழந்தைகள் மருத்துவர்களாக தமிழக அரசு உறுதுணையாக இருந்துள்ளது. இந்த மயிலம் தொகுதியில் 7 இடத்தில் அம்மா மினி கிளினிக் கொடுத்துள்ளோம். ஏழை, எளிய பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கி வருகின்றோம். உழைக்கும் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனம் மானிய விலையில் கொடுத்த அரசு எங்கள் அரசு. பிறக்கின்ற குழந்தைகள் ஆரோக்கியமாக வளர 16 வகையான பொருட்கள் அடங்கிய அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம் வழங்கி வருகின்றோம்.
இவ்வாறு அவர் பேசினார்.