

சென்னை ஆழ்வார்பேட்டையில் அடுக்குமாடி கட்டிடத்தின் தண்ணீர் சேமிப்பு தொட்டி பூமிக்குள் புதைந்ததால் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
சென்னையில் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. குடியிருப்புகளுக்குள் மழைநீர் உள்ளே புகுந்துள்ளன. மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ள தால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் சி பிளாக்கில் தரைத்தளத்தில் வீட்டின் முன்பு தண்ணீரை சேமித்து வைக்க கட்டப்பட்டிருந்த தொட்டி நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் திடீரென்று பூமிக்குள் புதைந்ததால் பள்ளம் ஏற்பட்டது. இதனை குடியிருப்பு வாசிகள் யாரும் பெரிதாக கருதவில்லை. அனைவரும் தூங்கச் சென்றுவிட்டனர். நேற்று அதிகாலை 3 மணி அளவில் தண்ணீர் சேமிப்பு தொட்டிக்கு மேலே கட்டிடத்தின் ஒரு பகுதி உடைந்து கீழே விழுந்தது.
சத்தம் கேட்டு வெளியே வந்த மக்கள் அதிர்ச்சி அடைத்தனர். இதையடுத்து சி பிளாக்கில் வசித்து வரும் 16 குடும்பத்தினரும் குழந்தைகளுடன் அவசர அவசரமாக குடியிருப்பை விட்டு வெளியேறினர். தகவல் அறிந்து வந்த மயிலாப்பூர் போலீஸார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொதுமக்களை சமாதானம் செய்தனர்.
பின்னர் சி பிளாக்கில் வசித்தவர்களை மட்டும் தங்களுடைய வீடுகளுக்கு செல்ல வேண்டாம். மற்ற 7 பிளாக்குகளில் வசிப்பவர்கள் அவரவர் வீடுகளுக்கு செல்லலாம் என்று தெரிவித்தனர். இதையடுத்து சி பிளாக்கில் வசிப்பவர்கள் மற்ற பிளாக்குகளில் உள்ள நண்பர்கள் வீடுகளுக்கு சென்றனர். இதனால் ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.