அரசு மருத்துவமனைகளை நரகத்துடன் ஒப்பிட்டு பேச்சு: கமல்ஹாசனுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் கண்டனம்- கரோனா காலத்தில் மருத்துவமனைகளின் சேவை மகத்தானவை என மருத்துவர் ருத்ரன் கருத்து

அரசு மருத்துவமனைகளை நரகத்துடன் ஒப்பிட்டு பேச்சு: கமல்ஹாசனுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் கண்டனம்- கரோனா காலத்தில் மருத்துவமனைகளின் சேவை மகத்தானவை என மருத்துவர் ருத்ரன் கருத்து

Published on

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘‘அரசு மருத்துவமனைக்கு சென்றால் நரகத்தை பார்க்கலாம்’’ என்று பேசியுள்ளார். இது அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளை தவிர்த்துபெரும்பாலும் அரசு மருத்துவமனைகளுக்கே வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் இதுவரை 8.5 லட்சம் பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். சிகிச்சை அளிக்கும்போது தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவர்கள், செவிலியர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பிறகு, குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி ஆகியோர் சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதன்மூலம் பொதுமக்களிடம் அரசு மருத்துவமனைகள் மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கமல்ஹாசன் இவ்வாறு கூறியிருப்பது மருத்துவர்கள், செவிலியர்களை வேதனைப்படுத்தியுள்ளது. முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல மனநல மருத்துவர் ஆர்.கே.ருத்ரன் முகநூலில் கமல்ஹாசனை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். ‘அரசுமருத்துவமனைகள் உண்மையிலேயே அல்லலுற்றவரின் அல்லல் களைய, அல்லல் படும் அற்புத மனிதர்கள் செயல்படும் இடம்’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதுபற்றி மருத்துவர் ஆர்.கே.ருத்ரனிடம் கேட்டபோது, “எப்படிபேசுகிறார்களோ, அப்படித்தான் விமர்சனம் வரும். முன்பு இருந்ததைவிட அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு தற்போது மிகவும் நன்றாக உள்ளது. அதுவும், கரோனா தொற்று காலத்தில் அரசுமருத்துவமனைகளின் சேவை மகத்தானது. முதல்வர், அமைச்சர்கள் தொடங்கி அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் அனைவரும் அரசுமருத்துவமனைகளில் சிகிச்சைபெற வேண்டும். அப்போதுதான்அரசு மருத்துவமனைகள் மீது பொதுமக்களுக்கு இன்னும் நம்பிக்கை ஏற்படும்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in