Published : 21 Mar 2021 03:14 AM
Last Updated : 21 Mar 2021 03:14 AM

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட 7,243 பேர் மனு; வேட்பு மனுக்கள் பரிசீலனை தொடங்கியது: முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ், மு.க.ஸ்டாலின், கமல், தினகரன் மனுக்கள் ஏற்பு

சென்னை

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட 7,243 வேட்பு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்ட நிலையில், மனுக்கள் பரிசீலனை நேற்று தொடங்கியது.

முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், டிடிவி தினகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில்,தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கி, 19-ம் தேதியுடன் முடிவடைந்தது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 6,164 ஆண், 1,067பெண், 3 மூன்றாம் பாலினத்தவர் என 7,243 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். அதிகபட்சமாக கரூரில் 97, மேட்டூர்-73, காங்கேயம்- 58,கொளத்தூர்-55, ஆர்கே.நகர்,விருத்தாச்சலம், போடி நாயக்கனூர்- 51, துறைமுகம்- 50 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. குறைந்த பட்சமாக திருச்சி மேற்கு தொகுதியில் 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை, நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம், பிரமாணப்பத்திரம், வழக்கறிஞர்களின் நோட்டரி விவரம், முன்மொழிபவர்கள் விவரம், அவர்கள் அந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களா என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதன்பின் ஏற்கப்பட்டன. சில வேட்பாளர்கள்4 மனுக்கள் தாக்கல் செய்திருந்தால் ஒரு மனு ஏற்கப்பட்டு மற்றவை நிராகரிக்கப்பட்டன.

அந்த வகையில், எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி, திமுக வேட்பாளர் உள்ளிட்டோர் மனுக்கள் ஏற்கப்பட்டன. போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ், திமுகவின் தங்கதமிழ்ச்செல்வன் உட்பட 25 மனுக்கள் ஏற்கப்பட்டன. 26 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. கொளத்தூர் தொகுதியில் மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 55 மனுக்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுகவின் ஆதிராஜாராம் உள்ளிட்ட வேட்பாளர்களின் 38மனுக்கள் ஏற்கப்பட்டன. 17 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

திருவொற்றியூர் தொகுதியில் 32 மனுக்கள் பெறப்பட்டதில் நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிமுக வேட்பாளர் குப்பன், திமுக வேட்பாளர் கே.பி.பி.சங்கர் உட்பட 22 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 10 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

கோவில்பட்டி தொகுதியில் அமமுகவின் டி.டி.வி.தினகரன், அதிமுகவின் கடம்பூர் ராஜூ உள்ளிட்ட 29 பேர் மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில் 15 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், பாஜக மகளிர் அணிதேசிய தலைவர் வானதி சீனிவாசன்உள்ளிட்டோர் மனுக்கள் ஏற்கப்பட்டன. தாராபுரம் தொகுதியில் பாஜகமாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட 18 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. விருத்தாச்சலம் தொகுதியில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் மனுக்கள் ஏற்கப்பட்டன. அதேபோல், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பாமக வேட்பாளர் கஸாலி உள்ளிட்டோர் மனுக்கள் ஏற்கப்பட்டன.

திருமங்கலம் தொகுதியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சைதாப்பேட்டை தொகுதியில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் மனுக்களை ஏற்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தும்அதிகாரி அதற்கான விளக்கங்களை அளித்து ஏற்றுக் கொண்டார்.ராசிபுரத்தில் திமுக வேட்பாளர் மதிவேந்தன் பெயர் இரு தொகுதிகளில் இருப்பதாக அதிமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், வேட்பாளரின் விளக்கத்தை கேட்டு மனு ஏற்கப்பட்டது.

அதேபோல், துறைமுகம் தொகுதியின் பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் பெயர் தொடர்பாக குழப்பம் ஏற்பட்ட நிலையில் பின்னர் ஏற்கப்பட்டது. பதிவுபெற்ற கட்சிக்கு பதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கான இடத்தில் பூர்த்தி செய்ததால், திருவள்ளூர் தொகுதி மக்கள் நீதி மையம் வேட்பாளர் தணிகைவேல் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மனுக்கள் ஏற்பு விவரம்

நேற்று இரவு 9.30 நிலவரப்படி தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட விவரத்தில் 3 ஆயிரத்து 302 மனுக்கள் ஏற்கப்பட்டிருந்தன. 1,998 மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 23 வேட்பு மனுக்களில், பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்உட்பட 13 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டிருந்தன. 10 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. சில மனுக்கள் மீதான முடிவுகள் இன்று வெளியாகும் என தெரிகிறது.

நாளை மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை திரும்ப பெற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அப்போது 234 தொகுதிகளிலும் களத்தில் இருப்பவர்கள் யார் என்ற விவரம் தெரியவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x