

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர்களது மகள்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விராலிமலை தொகுதியில் அதிமுக வேட்பாளரான மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், திமுக வேட்பாளர் எம்.பழனியப்பன் ஆகியோர் தங்களது கூட்டணிக் கட்சியினரோடு சென்று தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களுக்கெல்லாம் அவரது மூத்த மகள் ரிதன்யா பிரியதர்ஷினியும் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
அவர் பேசும்போது, “வேட்பாளரை எனது தந்தை என்பதைவிட உங்கள் வீட்டுப் பிள்ளை என்றே கூறலாம். அந்த அளவுக்கு உங்களுக்காக உழைத்துக்கொண்டு இருக்கிறார். ஏற்கெனவே வெற்றி பெற்றதால் காவிரி தண்ணீரைக் கொண்டு வந்தார். மீண்டும் வெற்றி பெற்றால் காவிரியையே ஊருக்குள் கொண்டு வந்துவிடுவார்’’ என பேசி ஆதரவு திரட்டி வருகிறார். இவர் கடந்த 2016 தேர்தலிலும் தனது தந்தைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, திமுக வேட்பாளர் எம்.பழனியப்பனின் மகள் லாவண்யா லட்சுமியும் தொகுதிக்குள் ஆதரவாளர்களோடு வீடுவீடாக சென்று தந்தைக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
எம்பிபிஎஸ் 3-ம் ஆண்டு படிக்கும் இவர், “மருத்துவம் படித்து முடித்துவிட்டு இந்த தொகுதி மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்ற எனது தந்தையின் ஆசையை நிறைவேற்றுவேன். உங்களை நம்பித்தான் 3-வது முறையாக நிற்கிறார். அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள். அநாதையாக்கிவிடாதீர்கள்” என்று பேசி ஆதரவு திரட்டி வருகிறார்.
தங்களது தந்தையை இத்தேர்தலில் வெற்றி பெறச் செய்வதற்காக மாணவிகளான ரிதன்யா பிரியதர்ஷினி, லாவண்யா லட்சுமி ஆகியோர் தேர்தல் களத்தில் இறங்கி இருப்பது விராலிமலை தொகுதியில் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தி உள்ளது.