

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாததால் பாமக தனியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளராக அக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும், அதிமுக கூட்டணியின் பாமக வேட்பாளராக அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் ஏ.வி.ஏ.கஸ்ஸாலியும் போட்டியிடுகின்றனர். திமுகவுக்கு செல்வாக்கான இந்த தொகுதியாக இந்த தொகுதி உள்ளது. அந்த அளவுக்கு திமுக தொகுதியில் கட்டமைப்பை பலப்படுத்தியுள்ளது. தீவிர பிரச்சாரத்திலும் திமுகவினரும், கூட்டணி கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரத்தில் பாமகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும், கூட்டணி கட்சிகளான அதிமுக மற்றும் பாஜகவினரின் ஒத்துழைப்பு குறைவாகவே உள்ளது.
இதுதொடர்பாக பாமகவினரிடம் கேட்ட போது, “இந்த தொகுதியில் திமுகவை பாமக வீழ்த்தும். அந்த அளவுக்கு பிரச்சாரம் செய்து வருகிறோம். கூட்டணி கட்சிகளின் பிரச்சாரத்துக்கு சரியாக வருவதில்லை. அவர்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் பாமக மிகப்பெரிய வெற்றி பெறும். கருணாநிதி, அவரது மகன் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் என திமுகவின் வாரிசு அரசியலை வைத்து பிரச்சாரம் செய்து வருகிறோம். இதற்குமுன் இந்த் தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் யாரும் தொகுதி பக்கமே வரவில்லை. ஆனால், பாமக வேட்பாளர் மக்களோடு மக்களாக பழகியவர். பாமகவின் தேர்தல் அறிக்கையை சொல்லி வாக்கு சேகரித்து வருகிறோம்” என்றனர்.