பிரச்சாரத்துக்காக தமிழகத்துக்கு படையெடுக்கும் கம்யூனிஸ்ட் தேசியத் தலைவர்கள்

பிரச்சாரத்துக்காக தமிழகத்துக்கு படையெடுக்கும் கம்யூனிஸ்ட் தேசியத் தலைவர்கள்
Updated on
1 min read

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசியத் தலைவர்கள் தமிழகத்தில் இந்த மாத இறுதியில் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் தலா 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதற்கான வேட்பாளர்களை சமீபத்தில் அறிவித்து பிரச்சாரங்களை கட்சிகள் தொடங்கியுள்ளன.

மார்க்சிஸ்ட் கட்சி தனது தேர்தல் அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது. தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை நாளை (மார்ச் 22) வெளியிடப்படவுள்ளது. தற்போது மாநில அளவிலான தலைவர்கள் திமுக உட்பட கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகின்றன.

இதற்கிடையே கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு இடம்கூட கம்யூனிஸ்ட்கள் வெற்றி பெறவில்லை. இதனால் தமிழக சட்டப்பேரவை வரலாற்றிலேயே கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் இல்லாத பேரவையாக அது அமைந்துவிட்டது. எனவே, தற்போது கிடைத்த 6 தொகுதிகளிலும் வெற்றிபெற இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தீவிரம் முனைப்பு காட்டுகின்றன.

இதற்காக தேசியத்தலைவர்களும் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் களம் இறங்கியுள்ளனர். அதன்படி இந்திய கம்யூ. கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்ச் 29 முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை தமிழகத்தில் 6 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

அதேபோல், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத் ஆகியோர் இந்த மாத இறுதியில் தலா 2 நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர். இதேபோல், மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் பிரச்சாரம் செய்யவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in