

மூலப் பொருட்கள் விலையேற்றத்துக்கு தீர்வு காண வலியுறுத்தி, தமிழகத்தில் தீப்பெட்டி ஆலைகள் நாளை முதல் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றன.
தமிழகத்தில் தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 400 இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இவற்றுக்காக 3 ஆயிரம் பேக்கேஜிங் பிரிவுகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் சுமார் 4 லட்சம் தொழிலாளர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் பெறுகின்றன. 90 சதவீதம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் இத்தொழில் சமீப காலமாக அழிவை நோக்கி செல்கிறது.
கடந்த 2 மாதங்களாக தீப்பெட்டி உற்பத்திக்கு தேவைப்படும் மூலப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு காரணமாக லாரி வாடகையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் தீப்பெட்டி உற்பத்திக்கான அடக்கச்செலவு சுமார் 60 சதவீதம் அதிகரித்துள்ளது.
எனவே, தீப்பெட்டி தொழிலில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவின் காரணமாக நாளை (22-ம் தேதி) முதல் மார்ச் 31 வரை 10 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்தம் செய்வது என, தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முடிவெடுத்துள்ளனர். இதனால், இத்தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உருவாகி உள்ளது.
நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர் வி.எஸ்.சேதுரத்தினம் கூறும்போது, ‘‘அட்டை, குச்சி, ரசாயனங்களின் விலை உயர்வு காரணமாக தீப்பெட்டி உற்பத்தியின் அடக்க விலை60 சதவீதம் உயர்ந்துவிட்டது. ஆனால், சுமார் 15 ஆண்டுகளாக தீப்பெட்டியின் சில்லறை விற்பனை விலையை ரூ.1-க்கு மேல் அதிகரிக்க முடியவில்லை
கரோனா காலத்தில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வங்கியில் பெற்ற கடனுக்கான வட்டியை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும். தீப்பெட்டிக்கான மூலப்பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து சிட்கோ மூலம் வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி, உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்’’ என்றார்.