டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் வெற்றிபெற தமிழகத்தில் பாஜக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும்: பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் கருத்து

தஞ்சாவூரில் நேற்று முன்தினம் விவசாயிகளிடம் பேசிய பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ராஜ்விந்தர்சிங் கோல்டன்.
தஞ்சாவூரில் நேற்று முன்தினம் விவசாயிகளிடம் பேசிய பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ராஜ்விந்தர்சிங் கோல்டன்.
Updated on
1 min read

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் வெற்றிபெற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரும், அஜாத் கிஸான் சங்கர்ஸ் கமிட்டியின் பஞ்சாப் மாநிலதுணைத் தலைவருமான ராஜ்விந்தர்சிங் கோல்டன் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது:

விவசாயிகளைப் பாதிக்கும் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் போராடுகிறோம். எங்கள் உணர்வுகளை பிரதமர் மதிக்கவில்லை. எனவே, பாஜகவுக்கும் அக்கட்சியின் கூட்டணியில் உள்ள அதிமுகவுக்கும் விவசாயிகள் யாரும் வாக்களிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ள இங்கு வந்திருக்கிறோம்.

டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்திக்காமல் பிரதமர் இங்கு வந்து பிரச்சாரம் செய்கிறார். எங்களிடம் ‘ஒரு தொலைபேசி அழைப்பு தொலைவில்தான் இருக்கிறேன்’ எனக்கூறிவிட்டு, தமிழகம், மேற்குவங்கம், கேரளாவுக்கு பிரச்சாரத்துக்கு வருகிறார். எனவே, அவர் செல்லும் இடங்களுக்கே சென்று, அந்த தொலைபேசி எண்ணைக் கேட்டு வாங்க வந்துள்ளோம்.

தமிழகத்தில் 1970-ம் ஆண்டுகளிலேயே மின்கட்டண உயர்வைக் கண்டித்து, கோவையில் விவசாயிகள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர். அதே வழியில்தான் தற்போது பஞ்சாப் விவசாயிகள் டெல்லியில் போராடி வருகிறோம்.

எங்கள் குழுவில் உள்ள பலரும், தற்போது தேர்தல் நடைபெறவுள்ள தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களுக்குச் சென்று, அங்குள்ள விவசாயிகள் சங்கத்தினரை சந்தித்து, விவசாயிகளின் போராட்டக் களம் குறித்தும், பாஜகவை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் எனவும் கூறி வருகிறோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in