Last Updated : 21 Mar, 2021 03:14 AM

 

Published : 21 Mar 2021 03:14 AM
Last Updated : 21 Mar 2021 03:14 AM

கேரளாவுக்கு இணையாக தேயிலை பறிக்கும் பணியாளர்களுக்கு ஊதியம்: வால்பாறை தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேறுமா?

மலைப் பகுதி, சமவெளி என இருவேறு நிலப்பரப்புகளை கொண்ட வால்பாறை தொகுதியில், மலைப் பகுதியில் தேயிலைத் தோட்டங்கள், பிஏபி திட்டத்தின் முக்கிய அணைகள், அத்துடன் இணைந்த சுற்றுலாத் தலங்களும், சமவெளிப் பகுதியில் நெல் வயல்கள், கரும்பு தோட்டங்கள், தென்னந்தோப்புகள் எனவிவசாயப் பகுதிகளும் உள்ளன. இங்கு கவுண்டர், நாயக்கர்,செட்டியார் மற்றும் தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள் பெரும்பான்மை யாக இருந்தாலும், இதர சமூகத்தி னரும் குறிப்பிட்ட சதவீதம் வசிக் கின்றனர்.

இத் தொகுதியைப் பொறுத்த வரை கணிசமாக உள்ள தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகள், வேட்பாளர்களின் வெற்றியை நிர்ணயிக்கும். தற்போது கூலி உயர்வு வேண்டும் என்பது தொழிலாளர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

வால்பாறை, நீலகிரியில் அரசு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு தினமும் 333.27-ம்,தனியார் தோட்டத் தொழிலாளர் களுக்கு 343.27-ம் கூலியாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், டான்டீதேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு கூடுதலாக ரூ.12.50-ம், தனியார் தொழிலாளர்களுக்கு ரூ.5-ம் சேர்த்து வழங்கப்படும் என்றுஎம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார். ஆனால், தற்போது வரை கூலி உயர்வு அமல்படுத்தப் படவில்லை.

இதுகுறித்து தேயிலைத் தொழிலாளர்கள் கூறும்போது, "வால்பாறையில் உள்ள எஸ்டேட்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். பல்வேறு போராட்டங்களுக்குப் பின் தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது ரூ.343.27 தினக்கூலி வழங்கப்படுகிறது.ஆனால், அருகில் உள்ள கேரள மாநிலம் மளுக்கப்பாறை எஸ்டேட் தொழிலாளர்க ளுக்கு ரூ.416.16 கூலி வழங்கப்படுகிறது. அதாவது, கேரள தொழிலாளர் களைவிட வால்பாறை தொழிலாளர் களுக்கு ரூ.72 குறைவாக வழங்கப்படுகிறது. எனவே, கேரள தேயிலைத்தொழிலாளர்களுக்கு இணையான சம்பளம் வழங்கக் கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், இதுவரை பயனில்லை” என்றனர்.

இயற்கை எழில் நிறைந்த வால்பாறை, மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளது. தினமும்ஆயிரக்கணக்கானோர் வால்பாறைக்கு வருகின்றனர். சின்னக்கல் லாறு அருவி, சோலையாறு அணை, நல்லமுடி பூஞ்சோலை, பாலாஜி கோயில் உள்ளிட்ட இடங்கள் உள்ளன. வால்பாறையை சுற்றுலாமையமாக மேம்படுத்த வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, படகு இல்லம்,தாவரவியல் பூங்கா அமைக்கப்பட் டது. மேலும், கோவையிலிருந்து வால்பாறைக்கு ஒரு நாள் சுற்றுலாத் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. அதேசமயம், உதகைபோல வால்பாறையை முழுமையான சுற்றுலாத்தலமாக மேம்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது.

வால்பாறைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளிடம் ஆழியாறு சோதனைச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்று வால்பாறை வட்டார வியாபாரிகள் மற்றும் அனைத்து வணிகர்களின் அமைப்பு, தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனைமலை வட்டாரத்தில் தென்னைக்கு அடுத்தபடியாக நெல் விவசாயம் அதிகமாக நடைபெறுகிறது. எனவே, நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், தீயணைப்புநிலையம், வட்டாரப் போக்கு வரத்து அலுவலகம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க வேண்டுமெனவும் வலியுறுத் தப்பட்டு வருகிறது.

அதிமுக-இந்திய கம்யூ. கடும் போட்டி

வால்பாறை தொகுதியில் ஆண்கள் 97,384 பேர், பெண்கள்1,04,253 பேர், மூன்றாம் பாலினத்தவர் 18 பேர் என மொத்தம் 2 லட்சத்து ஆயிரத்து 655 வாக்காளர்கள் உள்ளனர். 2016 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கஸ்தூரி வாசு69,980 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட தா.பால்பாண்டி 61,736 வாக்குகளும், இ.கம்யூ. வேட்பாளர் மணிபாரதி 3,494 வாக்குகளும், பாஜக வேட்பாளர் முருகேசன் 2,565 வாக்குகளும் பெற்றனர். இம்முறை அதிமுகவும், திமுகவின் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்டும் மோதுகின்றன. கடந்த மக்களவைத் தேர்தலில் வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுகவுக்கு 77,910 வாக்குகளும், அதிமுகவுக்கு 48,414 வாக்குகளும் கிடைத்தன. குறிப்பாக, மலைப் பகுதியில் திமுகக்கு 23,190 வாக்குகளும், அதிமுக-வுக்கு 10,210 வாக்குகளும் கிடைத்தன. இந்த தேர்தலில் அதிமுக-இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. அதிமுக வேட்பாளராக அமுல்கந்தசாமியும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளராக ஆறுமுகமும் போட்டியிடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x