

தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் கோவை ராம் நகரில் நேற்று நடைபெற்றது. இதில், தொண்டாமுத்தூர் அதிமுக வேட்பாளரும், உள்ளாட்சித் துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
கூட்டணி காரணமாக, கோவை தெற்கு தொகுதி பாஜகவுக்கும், அத்தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏ அம்மன் அர்ச்சுணனுக்கு கோவை வடக்கு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறுக்குவழியில் முதலமைச்சராவதை தடுத்தோம். நாங்கள் எப்போதும் சிறுபான்மையினர் பாதுகாப்பையும், உரிமையையும் விட்டுத்தரமாட்டோம். பாஜக வேட்பாளர் வானதி சீனிவா சனுக்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஒரு பொருட்டேஅல்ல. கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் - பாஜக இடையேதான் போட்டி’’ என்றார்.
கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் பேசும்போது, ‘‘மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக நடந்துகொண்டதால்தான், தமிழகத் துக்கு பல திட்டங்கள் வந்துள்ளன. கோவை தெற்கு தொகுதியில் ஷூட்டிங் வந்துள்ள ஹீரோவை, படப்பிடிப்பு முடிந்ததும் திருப்பி அனுப்பிவிடலாம்" என்றார்.
கமல்ஹாசனுக்கு பழக்கூடை
கோவை காந்திபார்க் பகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று நடந்து சென்று வாக்கு சேகரித்தபோது, அவரது காலில் பொதுமக்கள் சிலர் மிதித்ததால், காயம் ஏற்பட்டது. கமல்ஹாசன் விரைவில் குணமடைய வாழ்த்தி, பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் அவருக்கு நேற்று பழக்கூடையும், வாழ்த்து கடிதத்தையும் கட்சி நிர்வாகிகள் மூலம் அனுப்பிவைத்தார்.