

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக உரிமைகளை முதல்வர் பழனிசாமி விட்டுக்கொடுக்கிறார் என்று திமுக மாநில துணைப்பொதுச் செயலர் ஆ.ராசா எம்.பி.கூறினார்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டம், அவிநாசி - சேவூர் சாலையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பத்மநாபன் தலைமை வகித்தார். இதில் ஆ.ராசா பேசியதாவது: இந்த தேர்தல், அரசியல் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அவிநாசியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பரப்பி, சாதியைத்தூண்டி வெற்றியை பறித்துவிடலாம் என எண்ணுகிறார்கள். உண்மையில், நல்ல ஒரு சட்டப்பேரவை உறுப்பினரை அவிநாசி தொகுதி பெறப்போகிறது. இந்த தொகுதிக்கான தேவைகள் அனைத்தையும், திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் இத்தொகுதியில் வெற்றி பெற இருக்கும் அதியமானும், நானும் ஒன்றிணைந்து நிறைவேற்றுவோம்.
23 வயதில் மிசா சட்டத்தை எதிர்த்து சிறைக்கு சென்றவர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வரான பழனிசாமி, தமிழக உரிமைகள் அனைத்தையும் விட்டுக்கொடுத்து வருகிறார். மிக விரைவில், இலவச மின்சாரத்தையும் விட்டுக்கொடுக்க போகிறார். ஸ்பெக்ட்ரம் ஊழல் எனக்கூறி என் மீது வழக்கு தொடுத்தார்கள். ஆனால், வழக்கை விசாரித்த நீதிபதி, நீங்கள் குற்றவாளி இல்லை எனக் கூறிவிட்டார்.
ஆனால், ஜெயலலிதா ஆட்சி நடத்துகிறேன் என முதல்வர் பழனிசாமி கூறுகிறார். ஜெயலலிதா மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டபோது வழக்கை விசாரித்த நீதிபதி, ’அரசியல் சட்டத்தையே படுகொலை செய்கின்ற அளவுக்கு அவர் ஊழல் செய்திருக்கிறார்’ என்று கூறினார். இந்த ஊழல் ஆட்சியைதான் பழனிசாமி கூறுகிறாரா?. இவ்வாறு அவர் பேசினார்.
அவிநாசி (தனி) தொகுதியில் போட்டியிடும் ஆதித்தமிழர் பேரவை நிறுவனரான இரா.அதியமான் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.