

கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் தடைபட்டிருந்த மின் விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பருவமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்யும் பொருட்டு 2 ஆயிரத்து 350 மின் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1,313 மின் கம்பங்கள், 13 மின்மாற்றிகள், 137 கி.மீ. தூரத்துக்கு மின்வட கம்பிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. மேலும், 5 நகராட்சிகள், 15 பஞ்சாயத்துகளுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 905 கிராமங்களில் 700 கிராமங்களுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டுவிட்டது. 150 கிராமங் களுக்கு மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், 55 கிராமங்களில் மழை நீர் வடிந்த உடன் மின் விநியோகம் சீரமைக்கப்படும்.
இதைத் தவிர, 8 கூட்டு குடிநீர் திட்டங்களுக்கான பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின்பாதை வழித்தடங்கள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு முழுவதுமாக மின் விநியோகம் வழங்கப்பட்டுவிட்டது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மு.சாய்குமார், தலைமைப் பொறி யாளர்கள் மு.பாண்டி, செந்தில் வேல் ஆகியோர் கடலூரில் முகாமிட்டு மின் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு வரு கின்றனர்.